அக். 31-க்குள் தங்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை துபாய்க்கு அழைத்து வரும் தகுதியானவர்களுக்கு, ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் நிபந்தனைகளுடன் AED 3,000 வரை சலுகைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை (DET) இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களுக்காக ‘A Dubai Invite’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், வெளிநாட்டில் இருக்கும் உங்கள் குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ துபாய்க்கு அழைத்து வந்தால், AED 3,000 மதிப்புள்ள சலுகைகளை பெற முடியும்.
என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
விருந்தினர்களை அழைத்து வரும் குடியிருப்பாளர்களுக்கு ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிற சேவைகளில் AED 3,000-க்கும் அதிகமான சலுகைகள் வழங்கப்படும்.
ஹோட்டல்களில் தங்கும் வசதி: Melia Desert Palm, ME Dubai by Meliá, Mina Seyahi மற்றும் IHG properties ஆகிய ஹோட்டல்களில் தங்குவதற்கு சலுகைகள் கிடைக்கும்.
உணவகங்கள்: துபாயில் உள்ள 12 முன்னணி உணவகங்களில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள்: Aquaventure World மற்றும் IMG Worlds of Adventure-ல் ஒரு நாளைக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் Grand Hyatt Dubai Waterpark-ல் டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் சலுகைகள்: Careem Rides-ல் ஐந்து சவாரிகளுக்கு தலா 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. Hala Taxis-ல் எட்டு வாரிகளுக்கு தலா 20% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Careem Plus-ல் மூன்று மாதங்களுக்கு Plus Membership கிடைக்கும்.
யாரெல்லாம் இதில் பங்கேற்கலாம்?
அழைப்பாளர்கள்: 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட, செல்லுபடியாகும் Emirates ID வைத்துள்ள அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்.
விருந்தினர்: அமீரகத்தில் வசிக்காத வெளிநாட்டு நண்பர்கள் அல்லது உறவினர்கள் (சுற்றுலா விசா அல்லது ‘விசா ஆன் அரைவல்’ மூலம் வருபவர்கள்).
பயணக் காலம்: விருந்தினர்கள் 2026 ஜூலை 20 முதல் அக்டோபர் 31 வரை துபாய்க்கு வருகை தர வேண்டும்.
சலுகையைப் பெற என்ன செய்ய வேண்டும்?
- விருந்தினர்கள் துபாய் வந்து சேர்வதற்கு முன்பாக, அவர்களின் விவரங்களையும் வருகை தேதியையும் https://www.visitdubai.com/invite?category=Services#t4 இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். (ஒரு முறைக்கு 5 நபர்கள் வரை பதிவு செய்யலாம்).
- விருந்தினர்கள் விமானம், கடல் அல்லது சாலை வழியாக துபாய்க்கு வந்து சேர்ந்ததும், அவர்களின் வருகை தானாகவே சரிபார்க்கப்படும்.
- விருந்தினர் வந்த 72 மணி நேரத்திற்குள் உங்கள் மின்னஞ்சலுக்கு சலுகை குறித்த விவரங்கள் அனுப்பப்படும். இந்தச் சலுகைகளை 2026 டிசம்பர் 31 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
