திரைப்படம், வான்வெளி, விளையாட்டு, சட்டம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் எனத் துறை எதுவாக இருந்தாலும், தங்களால் முத்திரை பதிக்க முடியும் என்பதை இந்த 7 எமிராட்டி பெண்களும் நிரூபித்துள்ளனர்.
அமீரகம் இன்று உலகளவில் அறிவியல், விண்வெளி, பொருளாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் அதிவேக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த அபார வளர்ச்சிக்கு பின்னணியில் அந்நாட்டு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. பாரம்பரிய வரம்புகளை உடைத்து, தங்களின் திறமையால் புதிய பாதைகளை அமைத்து, அமீரகத்திற்குப் பெருமை தேடித்தந்த 7 சாதனை எமிராட்டி பெண்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
நாய்லா அல் கஜா – திரைத்துறை
அமீரகத்தின் முதல் பெண் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர் நாய்லா அல் கஜா. அரபுலகில் பெண்கள் திரையுலகிற்குள் நுழைவது அரிதாக இருந்த காலத்தில், சினிமா மீதான தனது பேரார்வத்தால் தடைகளை உடைத்து வெளிவந்தார்.
ஷேக்கா மோஸா அல் மக்தூம் – காவல்துறை
துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக்கா மோஸா அல் மக்தூம், துபாய் காவல்துறையில் ஹெலிகாப்டர் பைலட்டாகச் சேர்ந்த முதல் எமிராட்டி பெண்மணி ஆவார்.
விமானத்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஆண்களின் ஆதிக்கத்தை மாற்றி, வானத்தைத் தொடும் கனவு கொண்ட எந்தவொரு பெண்ணுக்கும் வானமே எல்லை என்பதைத் தனது விடாமுயற்சியால் நிரூபித்துள்ளார்.
ஷேக்கா லதீஃபா அல் மக்தூம் – விளையாட்டுத்துறை
அமீரக வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் விளையாட்டு வீரர் ஷேக்கா லதீஃபா அல் மக்தூம் ஆவார். 2008-ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ‘Show Jumping’ பிரிவில் பங்கேற்றார்.
சல்மா அல் பலூஷி – விமானத்துறை
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ‘First Officer’ நிலைக்கு உயர்ந்த முதல் எமிராட்டி பெண் சல்மா அல் பலூஷி ஆவார். கடினமான பயிற்சிகளையும், சவாலான வான்வழிப் பயணங்களையும் திறம்படக் கையாண்டு, வணிக ரீதியிலான சர்வதேச விமானங்களை இயக்கும் முதன்மை எமிராட்டி பெண்களில் ஒருவராக வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஜஹ்ரா லஹ்ரி – விளையாட்டுத்துறை
அமீரகத்தின் ‘Ice Princess’ என்று அன்போடு அழைக்கப்படும் ஜஹ்ரா லஹ்ரி, சர்வதேச பனிச்சறுக்குபோட்டிகளில் ஹிஜாப் அணிந்து பங்கேற்ற உலகின் முதல் தொழில்முறை பனிச்சறுக்கு வீரர் ஆவார்.
தனது மத நம்பிக்கையையும், விளையாட்டு ஆர்வத்தையும் சமமாகப் பேணிப் பாதுகாத்த இவர், சர்வதேச பனிச்சறுக்கு சம்மேளனம் (ISU) தனது விதிகளைத் தளர்த்தி ஹிஜாப் அணிய அனுமதி வழங் காரணமாக இருந்தார். உடை கலாச்சாரத் தடைகளைத் தாண்டி சாதனை படைத்தவர்.
பாத்திமா அல் குபைசி – சட்டத்துறை
உலகின் மிகவும் புகழ்பெற்ற ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் (Harvard Law School) பட்டம் பெற்ற முதல் எமிராட்டி பெண் பாத்திமா அல் குபைசி ஆவார்.
மனித உரிமைகள், பெண்கள் உரிமை மற்றும் கார்ப்பரேட் சட்டப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், கல்வி மற்றும் சட்டத்துறையில் அமீரகப் பெண்களின் அறிவுசார் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
ஆம்னா அல் குபைசி – விளையாட்டுத்துறை
வேகமும் சாகசமும் நிறைந்த கார் பந்தய உலகில், அமீரகத்தின் முதல் தொழில்முறை பெண் ரேசிங் டிரைவராகத் திகழ்பவர் ஆம்னா அல் குபைசி. Formula 4, Formula Regional மற்றும் F1 Academy ஆகிய சர்வதேச ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
