அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, 2026 ஆகஸ்ட் 31ஆம் தேதி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கால்பந்து உலகம் பல தலைசிறந்த வீரர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், ஒரு விளையாட்டையே தன் பெயரால் அடையாளப்படுத்தியவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி. உணவகத் டிஷ்யூ பேப்பரில் தொடங்கிய அவரது பயணம், சர்வதேச கால்பந்தின் உச்சகட்டக் கனவான உலகக் கோப்பையை ஏந்திய தருணம் வரை தொடர்ந்த ஒரு அசாத்திய வெற்றிக் காவியம்.
ஒரு டிஷ்யூ பேப்பரில் தொடங்கிய Messi-யின் கதை!
1987ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் ரோசாரியோ நகரில் பிறந்த மெஸ்ஸி, சிறு வயதிலேயே கால்பந்து மீது தீராத காதல் கொண்டிருந்தார். அவருக்குள் இருந்த அசாதாரண திறமையை முதன்முதலில் கண்டறிந்து, உள்ளூர் மைதானங்களுக்கு அழைத்துச் சென்று ஊக்குவித்தவர் அவரது பாட்டி செலியா (Celia). இன்று மெஸ்ஸி ஒவ்வொரு கோலுக்குப் பிறகும் இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி அஞ்சலி செலுத்துவது, தனது பாட்டி செலியாவுக்காகத்தான்.
மெஸ்ஸிக்கு 11 வயதாக இருந்தபோது, ‘வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு’ (Growth Hormone Deficiency) இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கான மருத்துவச் செலவுகளை ஏற்க அவரது குடும்பம் மிகவும் சிரமப்பட்டது.
அப்போது மெஸ்ஸியின் திறமையை கண்டறிந்த ஸ்பெயினின் புகழ்பெற்ற பார்சிலோனா கிளப், அவரது முழு மருத்துவச் செலவையும் ஏற்க உறுதியளித்தது. 2000ஆம் ஆண்டு, ஒரு உணவகத்தில் இதற்கான ஒப்பந்தம் செய்ய உடனடியாக காகிதம் கிடைக்காததால், பார்சிலோனா நிர்வாகி கார்லஸ் ரெக்சாக், ஒரு உணவகத்தின் டிஷ்யூ பேப்பரில் மெஸ்ஸியை அணியில் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தை எழுதி கையெழுத்திட்டார்.
அந்த ஒரு திசு பேப்பர், கால்பந்து வரலாற்றையே மாற்றி அமைத்தது. பின்னர் மெஸ்ஸி, பார்சிலோனாவின் புகழ்பெற்ற La Masia அகாடமியில் இணைந்தார்.
Barcelona-வின் நட்சத்திர வீரர்
பார்சிலோனாவில் இணைந்த மெஸ்ஸி, குறுகிய காலத்திலேயே உலகின் தலைசிறந்த வீரராக உயர்ந்தார். அவர் விளையாடிய காலத்தில் பார்சிலோனா 10 லா லிகா பட்டங்களையும், 4 UEFA சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றது.
மேலும், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் உயரிய Ballon d’Or விருதை 8 முறை வென்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அடைந்தார்.
தொடர் தோல்வியில் துவண்ட Messi
அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி தனது முழு உழைப்பையும் கொடுத்த போதிலும், சர்வதேச அரங்கில் அவருக்குத் தொடர் ஏமாற்றங்களே மிஞ்சின.
2014 FIFA World Cup Runners-up
2015 Copa América Runners-up
2026 Copa América Runners-up
மூன்று முக்கியத் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் அர்ஜென்டினா தோல்வியடைந்தது. இதனால் கடுமையான விமர்சனங்களாலும் மன உளைச்சலாலும் உடைந்த மெஸ்ஸி, 2016-ல் சர்வதேசக் கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 66 நாட்களிலேயே தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று அர்ஜென்டினா அணிக்கு மீண்டும் திரும்பினார்.
விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
- 2021 கோபா அமெரிக்கா: மெஸ்ஸியின் விடாமுயற்சிக்கு இறுதியில் காலம் பதில் அளித்தது. கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி, தனது தலைமையில் அர்ஜென்டினாவுக்கு முதல் சர்வதேசக் கோப்பையை வென்று கொடுத்தார்.
- 2022 கத்தார் உலகக் கோப்பை: தனது வாழ்நாள் கனவான FIFA உலகக் கோப்பையை வென்று, அர்ஜென்டினாவை உலகச் சாம்பியனாக்கினார்.
- 2024 கோபா அமெரிக்கா: மீண்டும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அணியின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
- 2026 உலகக் கோப்பை: தனது 39-வது வயதிலும் அர்ஜென்டினா அணியை இறுதிப்போட்டி வரை வழிநடத்திச் சென்று தனது சர்வதேசப் பயணத்தின் இறுதி அத்தியாயத்தை எழுதினார்.
அர்ஜென்டினாவின் தலைசிறந்த கால்பந்து சகாப்தம்
அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, நாட்டின் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்கிறார்.
ஒரு உணவகத்தின் டிஷ்யூ பேப்பரில் சிறுவனாக தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மெஸ்ஸி பின்னர், ஓர் எளிய காகிதத்தில் GOAT ஆக சர்வதேச ஓய்வை அறிவித்தவர். இவ்விரு தருணங்களுக்கு இடையில், மைதானங்களில் அவர் செதுக்கிய சாதனைகள், கால்பந்து வரலாற்றில் என்றும் அழியாத தடங்களாகப் பதிந்துள்ளன.
