மக்களின் நலனுக்கே முதலிடம்; அமீரகத்தின் புதிய 3 ஆண்டு பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் – AED 2,925 பில்லியன் ஒதுக்கீடு!

2027 நிதியாண்டிற்காக AED 90.1 பில்லியன் பட்ஜெட்டை அமைச்சரவை ஒதுக்கியுள்ளது. 

அமீரகத்தின் துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் கூடிய அமீரக அமைச்சரவை, 2027 – 2029 ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தம் AED 2,925 பில்லியன் மதிப்பிலான இந்த பட்ஜெட், முந்தைய மூன்று ஆண்டு கால பட்ஜெட்டை விட 28.3% கூடுதலாகும்.

2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் 

2027 – 2029 நிதியாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, 2027 நிதியாண்டிற்காக மட்டும் AED 90.1 பில்லியன் மதிப்பீட்டில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • சமூக மேம்பாடு மற்றும் ஓய்வூதியம்: AED 34.6 பில்லியன் (38.4%)
  • அரசு விவகாரங்கள்: AED 29.1 பில்லியன் (32.3%)
  • கூட்டாட்சி செலவினங்கள்: AED 17.8 பில்லியன் (19.7%)
  • நிதிச் சொத்துக்கள் மற்றும் முதலீடுகள்: AED 5.6 பில்லியன் (6.2%)
  • உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார ஆதாரங்கள்: AED 3 பில்லியன் (3.4%)

அமைச்சரவைக் கூட்டத்தின்போது பேசிய துபாய் ஆட்சியாளர், “எங்களது முன்னுரிமைகள் மாறவில்லை. கல்வி, சுகாதாரம், இருப்பிடம், சமூக சேவைகள், மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் அவர்களின் நலன் ஆகியவையே எங்களது முதன்மை இலக்குகள். அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தலைமையில், நமது சாதனைகளைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களுக்குச் சிறப்பான வாழ்க்கையை உருவாக்கத் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்தார்.

இந்த புதிய வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தொழினுட்பம், ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரம் ஆகிய முக்கியத் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்டகால நிதித் திட்டமிடலை உறுதிசெய்து, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை அடைவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

TAGGED: