உலகின் No. 1 பாஸ்போர்ட் முதல் அமீரகம் வந்த இந்திய அமைச்சர் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

உலகின் No.1 Passport

Arton Capital வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாஸ்போர்ட் தரவரிசையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் பிடித்துள்ளது. இத்தரவரிசையின்படி, அமீரகக் குடிமக்கள் Pre-Arrival விசா ஏதுமின்றி உலகளவில் 182 நாடுகளுக்கு எளிதாகப் பயணம் செய்யும் வசதியைப் பெற்றுள்ளனர்.

அதேவேளையில், இப்பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 72-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியக் குடிமக்கள் Pre-Arrival விசா தேவையின்றி, Visa on Arrival அல்லது Visa-Free சலுகைகளுடன் 70 நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

விருது வென்ற RTA

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அரசுத் துறைகளுக்கான முதன்முதல் ‘Dubai-it’ விருதைச் சாலை மற்றும் போக்குவரத்து வாரியம் (RTA) வென்றுள்ளதாக அறிவித்துள்ளார். துபாயின் அதிவேக வளர்ச்சி, புதுமை மற்றும் தரம் ஆகியவற்றை உலகிற்குப் பிரதிபலிக்கும் சிறந்த நிறுவனங்களை அடையாள கண்டு அங்கீகரிப்பதற்காகவே இந்த புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விருது RTA-வுக்கு வழங்கப்பட்டதற்கான முக்கிய காரணம், மிகக் குறுகிய காலக்கட்டத்திற்குள் மிக உயர்ந்த தரத்துடன் கூடிய போக்குவரத்துத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதே ஆகும். துபாயின் நவீன தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, விரைவாகவும் அதே சமயம் தரத்திலும் எவ்வித சமரசமும் இன்றியும் செயல்பட்டுச் சாதித்துள்ள RTA-வின் சீரிய சேவையை இந்த விருது சுட்டிக்காட்டுகிறது.

பயண நேரம் 60% குறையும்

துபாயில் உள்ள Al Yalayis Etihad ரயில் நிலையத்தையும், Jumeirah Golf Estates மெட்ரோ நிலையத்தையும் நேரடியாக இணைக்கும் புதிய நகரும் நடைபாதை (Travelator) மக்கள் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்குச் சிரமமின்றி நடந்து சென்று மாற உதவும் வகையில் இந்த நவீன வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நகரும் நடைபாதையின் வருகையால் பயணிகள் இனி டாக்ஸி அல்லது பிற வாகனங்களை எதிர்பார்க்காமல், ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக மெட்ரோ நிலையத்திற்கு எளிதாகச் செல்ல முடியும். இது பயணிகளின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதோடு, துபாய் நகரின் பிற பகுதிகளுக்குத் தடங்கலின்றி விரைவாகப் பயணிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

அமீரகம் வந்த இந்திய அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அக்டோபர் 14ஆம் தேதி அமீரகம் வந்தார். இந்தப் பயணத்தின்போது, இந்தியா – அமீரகம் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அபுதாபியில் நடைபெற்ற Raisina Middle East நிகழ்விலும் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

TAGGED: