துபாய் நகரம் முழுவதும் உள்ள வீதிகளின் பெயர்ப்பலகைகள், குடியிருப்புப் பகுதி பெயர் பலகைகள் மற்றும் வீடுகளின் எண்பலகைகள் அனைத்தும் முற்றிலும் புதிய மற்றும் நவீன தோற்றத்திற்கு மாறவுள்ளன.
துபாயின் உச்ச நகர்ப்புற திட்டமிடல் குழு (Supreme Committee for Urban Planning), சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் துபாய் நகராட்சி ஆகியவை இணைந்து இப்புதிய Dubai’s addressing system முறையைச் செயல்படுத்துகின்றன. துபாய் முழுவதிலும் உள்ள 186 பகுதிகளில் 2030ம் ஆண்டிற்குள் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய பெயர் பலகையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்:
- பகுதிகள், உட்புற வீதிகள் மற்றும் வீடுகளின் எண்பலகைகள் அனைத்தும் துபாய் முழுவதும் ஒரே மாதிரியான வண்ணங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நவீன வடிவமைப்பில் அமைக்கப்படும்.
- ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும் எண்பலகையில், துபாயின் தனித்துவமான 10 இலக்க ‘மக்கானி’ (Makani) இருப்பிட எண் தெளிவாக்கப்படும்.
- பலகைகளில் இடம்பெறும் QR codeகளைச் ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம், அப்பகுதியின் பெயர் உருவான வரலாறு, தெருவின் பெயர் பின்னணி, அருகில் உள்ள சுற்றுலா மையங்கள் மற்றும் முக்கிய அடையாளங்கள் குறித்த விவரங்களை உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம்.
எப்போது நடைமுறைக்கு வருகிறது?
இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் 2026ம் ஆண்டில் தொடங்குகின்றன. முதற்கட்டமாக Za’abeel 1, Za’abeel 2, Nad Al Sheba, Al Khawaneej 1 மற்றும் Nazwa ஆகிய 5 பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய பலகைகள் மாற்றப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டின் இறுதியில் விரிவாக்கப்பட்டு, மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கப்பட்டு, 2030-க்குள் 186 பகுதிகளிலும் இத்திட்டம் முழுமைபெறும்.
புதிய மாற்றம் வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கானது என்பதால், துபாயின் நெடுஞ்சாலைகளில் பயன்பாட்டில் இருக்கும் வண்ணக் குறியீடு வழிகாட்டிப் பலகைகளில் எந்த மாற்றமும் இல்லை. அப்பலகைகளின் அர்த்தங்கள்:
- நீல நிறப் பலகைகள் (Blue – E Routes): அபுதாபி, ஷார்ஜா போன்ற பிற எமிரேட்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் (எ.கா: E11 ஷேக் சயீத் சாலை). இதில் அமீரகத்தின் கழுகு முத்திரை இடம்பெற்றிருக்கும்.
- பச்சை நிறப் பலகைகள் (Green – D Routes): துபாய் நகருக்குள் இருக்கும் பல்வேறு முக்கிய இடங்களை இணைக்கும் சாலைகள். இதில் துபாயின் கோட்டை முத்திரை இடம்பெற்றிருக்கும்.
- வெள்ளை நிறப் பலகைகள் (White): குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தெருக்களுக்குள்ளே செல்ல உதவும் உட்புறச் சாலைப் பலகைகள்.
- பழுப்பு நிறப் பலகைகள் (Brown): சுற்றுலாத் தலங்கள், வரலாற்று இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களை அடைய உதவும் வழிகாட்டிப் பலகைகள்.
