துபாயில் அபராதம் செலுத்துவது இனி எளிது.. DubaiNow-வில் ‘Pay All Fines’ அறிமுகம்

துபாயில் போக்குவரத்து, பார்க்கிங் மற்றும் சாலிக் விதிமீறல்களுக்கான அபராதங்களை இனி DubaiNow செயலி மூலம் எளிதாக செலுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

துபாயில் வசிப்பவர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் பல்வேறு வகையான அபராதங்களை இனி வெவ்வேறு இணையதளங்களுக்கும் செயலிகளுக்கும் சென்று தனித்தனியாக கட்ட வேண்டியதில்லை. டிஜிட்டல் துபாய் அமைப்பு, DubaiNow செயலியில் ‘Pay All Fines’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் மூலம் போக்குவரத்து, பார்க்கிங் மற்றும் சாலிக் போன்ற பல்வேறு அரசுத் துறைகளின் அபராதங்களை ஒரே இடத்தில், ஒரே பரிவர்த்தனையில் செலுத்திவிட முடியும்.

இந்தச் சேவை எவ்வாறு செயல்படுகிறது? 

இந்த புதிய வசதி உங்களது எமிரேட்ஸ் ஐடி உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் வாகன பதிவு எண்ணை ஒவ்வொரு முறையும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை.

1. செயலியைப் பதிவிறக்கவும்: கூகுள் பிளேஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ‘DubaiNow’ செயலியைப் பதிவிறக்க வேண்டும்.

2. உள்நுழையவும்: புதிய பயனர்கள் தங்கள் விவரங்களை கொடுத்து கணக்கை உருவாக்கலாம். அல்லது UAE Pass கணக்கு வைத்திருப்பவர்கள் லாகின் செய்யலாம். 

3. சேவையை தேர்ந்தெடுக்கவும்: லாகின் செய்த பிறகு, ஹோம் ஸ்கிரீன் உள்ளே ‘Pay All Fines’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. அபராதங்களை சரிபார்க்கவும்: இப்போது உங்கள் எமிரேட்ஸ் ஐடியோடு தொடர்புடைய நிலுவையில் உள்ள அனைத்து அபராதங்களின் எண்ணிக்கை, அது என்ன வகையான அபராதம் மற்றும் மொத்தத் தொகை ஆகியவை திரையில் காண்பிக்கப்படும். (இதில் போக்குவரத்து அபராதங்கள், பார்க்கிங் விதிமீறல்கள், சாலிக் அபராதங்கள் போன்றவை அடங்கும்).

5. கட்டணம் செலுத்தவும்: விவரங்களை சரிபார்த்த பிறகு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது டிஜிட்டல் வாலட்டுகள் மூலம் ஒரே முறையில் மொத்தத் தொகையையும் செலுத்திவிடலாம். கட்டணம் செலுத்தியவுடன் அதற்கான உறுதிப்படுத்தல் செய்தி செயலியில் தோன்றும்.

இந்த சேவையின் முக்கிய நன்மைகள் என்ன?

1. நேர விரயம் தவிப்பு: வெவ்வேறு அரசுத் துறை இணையதளங்களுக்கோ அல்லது சேவை மையங்களுக்கும் தனித்தனியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. 

2. ஒரே பார்வையில் விவரங்கள்: உங்களுக்கு மொத்தம் எவ்வளவு அபராதம் உள்ளது என்பதை ஒரே இடத்தில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

3. கூடுதல் கட்டணங்களை தவிர்க்கலாம்: அபராதங்களை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் காலதாமத கட்டணங்கள் மற்றும் கூடுதல் பெனால்டிகளை தவிர்க்கலாம்.

4. தடையில்லா அரசு சேவைகள்: அபராதங்களை உடனுக்குடன் செலுத்துவதால், வாகனப் பதிவை புதுப்பிக்கும் போது ஏற்படும் தாமதங்கள் மற்றும் பிற அரசு பரிவர்த்தனைகளில் ஏற்படும் தடைகளை தவிர்க்க முடியும்.

TAGGED: