அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரிபவர்களின் தொழிலாளர் உரிமைகள்!

அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. இருப்பினும், பலர் தங்களுக்குள்ள சட்டப்பூர்வ உரிமைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்கவில்லை. அமீரகத்தில் வேலை செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய உரிமைகள் உள்ளன.

வேலை ஒப்பந்தம்

பணியில் சேரும் முன், ஊழியருக்கு எழுத்துப்பூர்வமான வேலை ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு சலுகையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களே ஒப்பந்தத்திலும் இடம்பெற வேண்டும்.

ஆட்சேர்ப்பு செலவுகள்

வேலைவாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு கட்டணம், விசா, குடியிருப்பு அனுமதி உள்ளிட்ட செலவுகளை ஊழியரிடம் வசூலிக்கக் கூடாது. இந்தச் செலவுகளை முழுமையாக நிறுவனமே ஏற்க வேண்டும்.

சம்பளம் மற்றும் விடுப்புகள்

ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் வழங்கப்பட வேண்டும். Wage Protection System (WPS) மூலம் சம்பளம் வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் கீழ் தகுதியுடைய ஊழியர்களுக்கு, பணியை விட்டு விலகும்போது End-of-Service Gratuity வழங்கப்பட வேண்டும்.


ஊழியர்களுக்கு சட்டப்படி ஆண்டு விடுப்பு, பொது விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளுக்கான உரிமை உள்ளது.

பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு தடை

பாலினம், இனம், மதம், தேசியம், சமூகப் பின்னணி அல்லது மாற்றுத்திறன் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது. பணியிடங்களில் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் கட்டாய வேலை வாங்குதல் சட்டவிரோதம். மேலும், நிறுவனங்கள் ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்திருக்கக் கூடாது.

பாதுகாப்பான பணிச்சூழல்

ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிச்சூழலை நிறுவனங்கள் வழங்குவது கட்டாயம். உங்கள் தொழிலாளர் உரிமைகள் மீறப்பட்டால், மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தில் (MoHRE) புகார் அளிக்கலாம்.  MoHRE உதவி எண்: 80084

தெரிந்து கொள்ள வேண்டியது

வேலைக்கு வருவதற்கு முன்பும், பணியில் சேர்ந்த பிறகும், ஊழியர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கும் “Know Your Rights” வழிகாட்டியையும் அமீரக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த உரிமைகளை தெரிந்துகொள்வது, அமீரகத்தில் பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் பணியாற்ற மிகவும் உதவியாக இருக்கும்.

TAGGED: