UAE-ல் பணியிடக் காயங்கள் மற்றும் இழப்பீடு குறித்த முக்கிய விதிகள் வெளியீடு; MoHRE புதிய அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம் (MoHRE), பணியிட பாதுகாப்பு மற்றும் பணி தொடர்பான காயங்களுக்கான இழப்பீடு குறித்த முக்கியமான விதிகளை வெளியிட்டுள்ளது.

பணியிடக் காயம் (Work Injury): 

பணிசெய்யும் போது அல்லது பணி நிமித்தமாக ஏற்படும் எந்தவொரு காயமும் இதில் அடங்கும்.

வீட்டிலிருந்து நேரடியாக வேலைக்குச் செல்லும்போதோ அல்லது வேலையிலிருந்து நேரடியாக வீட்டிற்குத் திரும்பும்போதோ ஏற்படும் விபத்துகளும் சட்டப்படி இதில் சேர்க்கப்படும்.

பணிகளின் தன்மையால் ஏற்படும் நோய்களும் (Occupational Diseases) இதன்கீழ் வரும்.

என்ன மாதிரியான காயங்களுக்கு இழப்பீடு இல்லை?

பணியிடத்தில் காயம் அடைந்தாலும், பின்வரும் 6 காரணங்களில் ஏதேனும் ஒன்று பொருந்தினால், ஊழியருக்கு இழப்பீடு (Compensation) பெற உரிமை இல்லை:

  • ஊழியர் தமக்குத் தானே திட்டமிட்டு காயத்தை ஏற்படுத்தினால்.
  • மது, போதைப்பொருட்கள் பயன்படுத்தி, அதன் தாக்கத்தில் இருக்கும்போது காயம் ஏற்பட்டால்.
  • பணியிடத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்ட தடுப்பு/பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தெரிந்துகொண்டே மீறுவதால் காயம் ஏற்பட்டால்.
  • ஊழியரின் தவறான செயலால் காயம் ஏற்பட்டால்.
  • தகுந்த மருத்துவ அதிகாரி பரிந்துரைக்கும் பரிசோதனைகள் அல்லது சிகிச்சைகளை நியாயமான காரணமின்றி ஏற்க மறுத்தால்.
  • பணியிடத்தில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கைகளை வேண்டுமென்றே மீறியதால் தான் காயம் ஏற்பட்டது என அதிகாரிகள் உறுதி செய்தால்.

முதலாளிகளின் (Employers) முக்கியக் கடமைகள்

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுவனங்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:

  • ஊழியர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு உபகரணங்களையும் இலவசமாக வழங்க வேண்டும்.
  • ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஆபத்து மேலாண்மை பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
  • ஊழியர்களுக்குத் தவறாமல் காலமுறை மருத்துவப் பரிசோதனைகளை நடத்த வேண்டும்.
  • வேலையிடக் காயங்கள் மற்றும் நோய்கள் குறித்த விவரங்களை நிறுவனத்தின் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்து, குறைந்தது 5 ஆண்டுகள் அந்த ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும்.
  • காயம் அல்லது தொழில்சார் நோய் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கும் முறைகள்

  • வேலை நேரத்தில் ஏற்படும் காயங்களுக்கான முழு மருத்துவச் செலவையும் முதலாளியே ஏற்க வேண்டும்.
  • ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தை (Basic Salary) அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு கணக்கிடப்படும்.
  • மருத்துவக் குழு ஊனத்தின் அளவை (Degree of Disability) தீர்மானிக்கும் அறிக்கை வந்த 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
  • காயம் காரணமாக ஊழியர் இறந்தாலோ அல்லது நிரந்தர முழு ஊனம் அடைந்தாலோ, முழு இழப்பீட்டுத் தொகையும் அவரது வாரிசுகளுக்கு  அல்லது அந்த  ஊழியருக்கு வழங்கப்படும். 
  • பகுதி ஊனம் (Partial Disability) ஏற்பட்டால், ஊனத்தின் சதவீதத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும்.
  • காயம் அடைந்த ஊழியரின் இழப்பீடு மற்றும் அனைத்துப் பாக்கிகளும் முழுமையாக வழங்கி முடிக்கப்படும் வரை, முதலாளி அவரை வேலையிலிருந்து நீக்கவோ அல்லது ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ கூடாது.

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அதே வேளையில் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதுமே இந்த  விதிகளின் முதன்மை நோக்கமாகும்.

TAGGED: