துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ( RTA ), அதன் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் உள்ள வழிகாட்டி பலகைகளை நவீனமயமாக மாற்றியமைக்கும் பணிகளை நிறைவு செய்துள்ளது.
துபாய் மெட்ரோவின் வழிகாட்டி பலகைகள்
துபாய் மெட்ரோவின் சிவப்பு மற்றும் பச்சை வழித்தடங்களில் உள்ள மொத்தம் 53 நிலையங்களில் உள்ள வழிகாட்டி பலகைகளை கியோலிஸ்–MHI உடன் இணைந்து RTA புதுப்பித்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 9,000 வழிகாட்டி பலகைகள் நவீனமயமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வழிகாட்டி பலகைகள் தினசரி பயணிகளுக்கு பயணத்தை எளிதாகவும், மென்மையாகவும், மேலும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் என RTA தெரிவித்துள்ளது.
RTAவின் ரயில் நிறுவனத்தின் ரயில் செயல்பாட்டு இயக்குநர் ஹசன் அல் முதாவா கூறுகையில், “வழி கண்டறியும் அமைப்புகளை மதிப்பீடு செய்து மேம்படுத்துவதன் மூலம் பொதுப் போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான உத்தியை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது” என்றார். “இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 9,000 வழி கண்டறியும் பலகைகள் மாற்றப்பட்டன, இதற்கு சுமார் 11,000 வேலை நேரங்கள் தேவைப்பட்டன” என்று அவர் கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டி பலகைகளின் அம்சங்கள்
இந்த பணிகளில் நுழைவு மற்றும் வெளியேறும் பலகைகளை மேம்படுத்துதல் மற்றும் மெட்ரோ நிலைய நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் புதிய பலகைகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும். மேலும் தெரிவுநிலையை மேம்படுத்துவதற்காக வெளியேறும் பலகைகள் இப்போது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். பயணிகளை சரியான ரயில் பாதைகளை நோக்கி வழிநடத்த தெளிவான பிளாட்ஃபார்ம் திசைக் குறிகாட்டிகள் மற்றும் தரை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் நகர்வு மேம்படும்.
பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஸ்டிக்கர்கள் மெட்ரோ நிலையங்கள் எங்கிலும் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் செய்திகள் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது சரியான நன்னடத்தைகளைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கின்றன.
