துபாய் விமான நிலையத்தில் AI மற்றும் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 10 பயணிகளின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும் “ரெட் கார்பெட்” நடைபாதை பயன்பாட்டுக்கு வந்தது.
ரெட் கார்பெட் நடைபாதை:
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு நடைமுறைகளை விரைவுபடுத்த, செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரெட் கார்பெட் (Red Carpet) என்ற நடைபாதை அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.
தடையின்றி சோதனை:
துபாய் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம், துபாய் விமான நிலையங்களுடன் இணைந்து இந்தச் சேவையை தொடங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் உலகிலேயே முதல் முறையாக துபாய் விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையை கடக்கும் பயணிகள் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லாமல், எந்தவிதமான தடையும் இன்றி இந்த செயல்முறையை முடிக்கலாம்.
இருப்பினும், சில குறிப்பிட்ட சிறப்பு வழக்குகள் மட்டும், அதிகபட்ச பாதுகாப்பு தரங்களை உறுதி செய்யும் வகையில், நேரடியாக அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படும்.
ஒரே நேரத்தில் 10 பயணிகளிடம் சோதனை:
சாதாரண முறைகளில் ஒரு பயணி மட்டுமே பரிசோதனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய ரெட் கார்பெட் நடைபாதையானது ஒரே நேரத்தில் 10 பயணிகளை 6 முதல் 14 விநாடிகளில் பரிசோதனை செய்யும் திறன் கொண்டது.
இது பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதோடு, விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறனையும் அதிகரிக்கும். இந்த ரெட் கார்பெட் திட்டத்தின் தொடக்கம், பதினோராவது ஆண்டாக உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் நிலையை உறுதிப்படுத்துவதற்கும் துபாய் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
