துபாயில் விரைவில் திறக்கப்படும் உலகின் உயரமான ஹோட்டல்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

வானுயர்ந்த கட்டிடங்களுக்கு புகழ்பெற்ற துபாய் நகரத்தில் தற்போது உலகின் மிக உயரமான ஹோட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது. சீல் துபாய் மெரினா (Ciel Dubai Marina) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல், இந்தாண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

377 மீட்டர் உயரமுள்ள, இந்த ஹோட்டல், இதுவரை உலகிலேயே மிக உயரமான ஹோட்டலாக இருந்த கெவோரா ஹோட்டலை (Gevora Hotel) பின்னுக்குத் தள்ளி, புதிய சாதனை படைக்க உள்ளது.

எப்போது திறக்கப்படும்?

இன்டர்கான்டினென்டல் ஹோட்டல்ஸ் குழுமம்  இந்த ஹோட்டல் நவம்பர் 2025-ல் திறக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நவம்பர் 15 தேதியில் இருந்து ஆன்லைனில் அறைகளை புக் செய்யலாம். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. 

சிறப்பம்சங்கள்: 

  • துபாய் மெரினா பகுதியில் வானுயர்ந்து நிற்கும் இந்த ஹோட்டலில், 82 மாடிகளில் 1,004 அறைகள் உள்ளன.
  • தி ஃபர்ஸ்ட் குரூப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் இதை நிர்வகிக்கிறது. இந்த ஹோட்டலில் இருந்து துபாய் மெரினா, அதன் பிரபலமான ஷாப்பிங் பகுதிகள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு எளிதாகச் செல்லலாம்.
  • இந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் ஒரு இன்ஃபினிட்டி நீச்சல் குளம் மற்றும் பார் இருக்கும். அங்கிருந்து பாம் ஜுமேரா, அரேபிய வளைகுடா மற்றும் துபாயின் முழு அழகையும் பார்க்க முடியும்.
  • 360 டிகிரி சுழலும் கண்ணாடிக் கூரையுள்ள பார்வையாளர் தளம் பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்கும்.
  • 74-வது மாடியில் உணவகமும், 76-வது மாடியில் ஸ்கை பூல் எனப்படும் நீச்சல் குளமும், 81-வது மாடியில் ஸ்கை லான்ஜ் ஒன்றும் (Sky Lounge) இருக்கும்.

இரண்டு பேர் தங்கும் டீலக்ஸ் அறைக்கு ஒரு இரவுக்கான கட்டணம் AED 2,400   முதல் தொடங்குகிறது. மூன்று பேர் தங்கும் அறைக்கு AED 4,305 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

துபாய் மெரினாவின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், மெரினா போர்டுவாக், வாட்டர் டாக்சிகள், துபாய் மெரினா மால், டிராம் மற்றும் மெட்ரோ இணைப்புகளுடன் நேரடியாக இணைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.