துபாய் விமான கண்காட்சியில், சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் தேஜஸ் ரக விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானி நமன்ஷ் சியால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு பிறகும் விமான கண்காட்சி தொடர்ந்து நடைபெற்றது குறித்து ஏர்ஷோ நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது.
விமான கண்காட்சி:
துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமானம் நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் நவ.17 அன்று விமான கண்காட்சி வான் சாகசங்களுடன் தொடங்கியது. இந்த கண்காட்சியில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.
தேஜஸ் விமான விபத்து:
நிகழ்வின் கடைசி நாளான நவ.21 அன்று இந்தியாவின் தேஜஸ் விமானம் சாகசத்தில் ஈடுபட்டபோது, திடீரென தரையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானி நமன்ஷ் சியால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துயர சம்பவம் நடந்த பிறகும், இறுதி நாள் விமான சாகசங்கள் ஏன் தொடர்ந்தன என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து உயிரிழப்புக்கு பிறகும் விமான கண்காட்சி தொடர்ந்து நடைபெற்றது குறித்து ஏர்ஷோ நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது.
மரியாதை செலுத்தும் விதமாக தொடர்ந்த நிகழ்ச்சி!
சம்பவம் குறித்து துபாய் ஏர்ஷோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விங் கமாண்டர் சியாலின் இழப்பால் துபாய் ஏர்ஷோ நிர்வாகக் குழு மிகவும் வருத்தம் அடைந்துள்ளது. அவரது குழுவுடன் ஆலோசித்த பிறகு, விமானப் பயணத்தின் மீதான அவரது ஆர்வத்திற்கும், அவரது பங்களிப்பிற்கும் மரியாதை செலுத்தும் விதமாகவே நிகழ்ச்சியைத் தொடர முடிவு செய்யப்பட்டது.
விங் கமாண்டர் சியால் இந்த ஆண்டு ஏர்ஷோவின் ஓர் அங்கமாக இருந்து, தனது திறமை மற்றும் அர்ப்பணிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அவரது நினைவாகவே சம்பவத்திற்குப் பிறகு நடந்த சாகசங்கள் அரங்கேற்றப்பட்டன.
சனிக்கிழமை நவ.22 அன்று அவரது வாழ்க்கை மற்றும் பங்களிப்பை போற்றும் வகையில் ஒரு சிறப்பு அஞ்சலி சேவை நடத்தப்பட்டது. எங்களது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபமும் அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
