குறைந்தபட்ச ஊதியம் உயர்வு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

ரொனால்டோவுக்கு சிறந்த மத்திய கிழக்கு வீரருக்கான விருது:

துபாயில் நடைபெற்ற குளோப் கால்பந்து விருதுகள் 2025-இல் பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறந்த மத்திய கிழக்கு வீரருக்கான விருது வழங்கப்பட்டது. 

சவூதியின் அல்-நாசர் அணிக்காக விளையாடும் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறந்த மத்திய கிழக்கு வீரருக்கான விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற பிறகு மேடையில் பேசிய அவர், “எங்கு விளையாடினாலும் கோல் அடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். நான் நினைத்த ஒரு இலக்கை நிச்சயம் அடைவேன்.

பழைய நண்பர்களையும், கால்பந்து உலகினரையும் சந்திப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார். ஸ்பெயினின் இளம் வீரர் லாமின் யமால், ‘சிறந்த 23 வயதுக்குட்பட்ட வீரர்’ மற்றும் ‘சிறந்த ஃபார்வர்ட்’ உட்பட பல விருதுகளைத் தட்டிச் சென்றார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் முன்கள வீரர் Ousmane Dembélé-க்கு ஆண்கள் பிரிவில் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பால் போக்பா, கபீப் நூர்மகோமெடோவ் போன்ற பல விளையாட்டு நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

அமீரக குடிமக்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு!

அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் எமிராட்டிகளின் குறைந்தபட்ச ஊதியத்தை AED 6,000-ஆக அரசு உயர்த்தியுள்ளது.  

அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் எமிராட்டிகளின் குறைந்தபட்ச ஊதியம் முன்னதாக AED 5,000-ஆக இருந்த நிலையில் தற்போது AED 6,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு வருடங்கள் செல்லுபடியாகும் பணி அனுமதிகளுக்கு மட்டுமே புதிய ஊதிய நடைமுறை பொருந்தும்.

புதிதாக பணிக்கு சேருபவர்கள், பணி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பவர்கள் அல்லது திருத்தம் செய்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும். நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை மாற்றுவதற்கு ஜூன் 30, 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2026 முதல், ஒரு அமீரகக் குடிமகனின் சம்பளம் AED 6,000-க்கு குறைவாக இருந்தால், அவர்களுக்கான பணி அனுமதியை அமைச்சகம் வழங்காது அல்லது புதுப்பிக்காது.

ஒருவேளை ஜூன் 30-க்குள் சம்பளம் உயர்த்தப்படாவிட்டால், ஜூலை 1, 2026 முதல் அந்த நிறுவனம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (Mohre) தெரிவித்துள்ளது. 

அலட்சியமாக செயல்பட்டதாக மருத்துவர்களுக்கு AED 2M  இழப்பீடு! 

துபாயில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது அதீத ரத்தப்போக்கால் கர்ப்பிணி உயிரிழந்த வழக்கில், அலட்சியமாக செயல்பட்டதாக நான்கு மருத்துவர்கள், பெண்ணின் கணவருக்கு AED 2 மில்லியன் இழப்பீடு வழங்க துபாய் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறியதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். 

பெண்ணின் கணவர் இது குறித்து  தொடர்ந்த வழக்கை விசாரித்த துபாய் சிவில் நீதிமன்றம், அலட்சியமாக செயல்பட்ட நான்கு மருத்துவர்கள் பெண்ணின் கணவருக்கு AED 2 மில்லியன் இழப்பீடு வழங்கவும், AED 50,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. 

இந்தியருக்கு உஸ்பெகிஸ்தானின் ஹீரோ விருது!

விமானத்தில் இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட உஸ்பெகிஸ்தான் பெண்ணின் உயிரை காப்பாற்றிய, துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவர் அனீஸ் முகமது, உஸ்பெகிஸ்தானின் ஹீரோவாக கௌரவிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த அனீஸ் முகமது, உஸ்பெகிஸ்தானில மருத்துவம் பயின்று வருகிறார். இவர் ஜூலை 29 அன்று தாஷ்கண்டிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் பயணிக்கு (Tachycardia) என்ற இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

அப்போது உடனடியாக செயல்பட்ட அனீஸ் சிகிச்சையளித்து பெண்ணின் உயிரை காப்பாற்றினார். அனீஸின் இந்த துணிச்சலான செயலுக்கு உஸ்பெகிஸ்தானின் நீதி அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட Yuksalish என்ற இயக்கம் உஸ்பெகிஸ்தானின் ஹீரோவாக கௌரவித்துள்ளது. 

அமீரகத்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டம்: 

அமீரகம் முழுவதும் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.  உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் நடைபெற்ற பிரமாண்ட முறையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 

அபுதாபியின் அல் வத்பாவில் 6,500 டிரோன்கள் மூலம் அமீரக முன்னாள் அதிபர் மாண்புமிகு ஷேக் சயீத் அல் நஹ்யான் மற்றும் தற்போதைய அதிபர் ஷேக் மாண்புமிகு ஷேக் முகமது சயீத் அல் நஹ்யான் அவர்களது  உருவப்படங்கள் ஒளிரச் செய்யப்பட்டன. 

துபாய் பிரேம் பகுதியில் நடைபெற்ற வாணவேடிக்கை நடைபெற்றது. மேலும் முதல் முறையாக டிரோன் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஸ் அல் கைமாவில் 2,300 டிரோன்கள் பீனிக்ஸ் பறவையின் உருவத்தை ஒளிரச் செய்தது. இது அதிக டிரோன்களால் உருவாக்கப்பட்ட பீனிக்ஸ் பறவை உருவம் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

ராஸ் அல் கைமா கடற்கரையில் 6 கி.மீ.க்கு நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியை வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோர் கண்டுகளித்தனர். 

அபுதாபி ஷேக் சயீத் திருவிழாவில் உலக சாதனை படைக்கும் வகையில் தொடர்ச்சியாக 62 நிமிடங்கள் வாணவேடிக்கை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 13 நிமிடங்கள் அதிகமாகும். 

சீனா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், அமீரகம் மற்றும் துருக்கி ஆகிய 6 நாடுகளில் புத்தாண்டு தொடங்கும் நேரத்தில் துபாய் குளோபல் வில்லேஜில் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. 

TAGGED: