🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாமல் திறக்கப்படும் குளோபல் வில்லேஜ்; இந்த ஆண்டு என்னென்ன ஸ்பெஷல்!

துபாய் குளோபல் வில்லேஜ்ஜின் 30வது சீசனில் டிராகன் கிங்டம்’ மற்றும் உலகின் சின்னங்களைக் கொண்ட ‘கார்டன்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ என இரண்டு புதிய பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

துபாய் குளோபல் வில்லேஜ் அதன் 30வது சீசனுக்காக புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சீசன், பல புதுமையான  பிரம்மாண்டமான மேம்பாடுகளுடன் பார்வையாளர்களை வரவேற்கிறது. இதில் முக்கியமாக, ‘டிராகன் கிங்டம்’ மற்றும் உலகின் முக்கிய அடையாள சின்னங்களைக் கொண்ட மலர் காட்சியான ‘கார்டன்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ ஆகியவை இந்த ஆண்டின் சிறப்பம்சங்களாகும்.

டிராகன் கிங்டம் (Dragon Kingdom):

குளோபல் வில்லேஜின் மிகப் பெரிய புதிய ஈர்ப்புகளில் ஒன்று ‘டிராகன் கிங்டம்’ ஆகும். இது ஆழமான, நடந்து சென்று பார்க்கக்கூடிய (Immersive Walk-through) சாகச அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாம்ப்களை சேகரிக்கும் பாஸ்போர்ட் ஸ்டாம்பிங் நிலையங்கள் தற்போது எல்லா பெவிலியன்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. 

கார்டன்ஸ் ஆஃப் தி வேர்ல்ட் (Gardens of the World):

இதில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் மலர் அலங்காரங்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற சின்னங்கள் இடம்பெறும்.

முக்கிய மேம்பாடுகளும், புதிய மாற்றங்களும்:

  • பழைய இடங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • கின்னஸ் உலக சாதனை படைத்த, டிராகன் ஏரியின் நீருக்கடியில் உள்ள ராட்சதத் திரை மாற்றப்படுகிறது. புதிய திரையானது மேம்படுத்தப்பட்ட தெளிவுடன் காட்சிகளை வழங்கும். 
  • பிரதான மேடை முழுவதுமாகப் புதுப்பிக்கப்பட்டு, அதிக பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் அதன் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெயர் மாற்றங்கள்:

  • ‘ரயில்வே மார்க்கெட்’ இப்போது ‘டிசெர்ட் டிஸ்ட்ரிக்ட்’ (Dessert District) என்று பெயர் மாற்றம் பெற்று, இனிப்பு வகைகளுக்கான தனி இடமாக மாற்றப்பட்டுள்ளது.
  • ‘ரோட் ஆஃப் ஆசியா’ இப்போது ‘ஆசியா பவுல்வர்ட்’ (Asia Boulevard) என்ற பெயரில், ஆசியாவின் பன்முகத்தன்மை மற்றும் உணவுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்.
  • பார்வையாளர்களுக்கு புதிய வழிகாட்டித் திரைகள் மற்றும் ஷார்ஜா சுரங்கப்பாதைக்கு புதிய வண்ணமயமான வடிவம்  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியஸ்டா ஸ்ட்ரீட் விரிவாக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட உணவு விருப்பங்கள்  கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குளோபல் வில்லேஜ், பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் உலக கலாச்சாரங்களை ஒரு புதிய பரிமாணத்தில் வழங்கத் தயாராக உள்ளது.  
1996ஆம் ஆண்டு துபாய் க்ரீக்கில் சில பெவிலியன்களுடன் துவங்கிய குளோபல் வில்லேஜ், இன்று முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த சீசனில் 10.5 மில்லியன் பார்வையாளர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.