UAE அதிபரை சந்தித்த அஜித் தோவல்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமீரக அதிபரை சந்தித்தார். அப்போது மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை அஜித், அமீரக அதிபரிடம் தெரிவித்தார். தனது வாழ்த்துகளையும் மோடியிடம் தெரிவிக்குமாறு அமீரக அதிபர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில், அபுதாபி இளவரசர் மாண்புமிகு ஷேக் காலேத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமீரகத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் அலி பின் ஹம்மாத் அல் ஷாம்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
OPEC மற்றும் OPEC+ அமைப்பிலிருந்து வெளியேறும் அமீரகம்
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பாள OPEC மற்றும் OPEC+ அமைப்பிலிருந்து மே 1, 2026 முதல் வெளியேறுவதாக அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் எண்ணெய் உற்பத்தி திறனை முழுமையாகப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அமீரகம் தனது எண்ணெய் உற்பத்தித் திறனை அதிகரிக்க பெருமளவில் முதலீடு செய்துள்ளது.
OPEC அமைப்பில் இருக்கும் போது விதிக்கப்படும் உற்பத்தி வரம்புகள், இந்த முதலீட்டின் முழு பலனை அடைய தடையாக இருக்கலாம். உலகளாவிய எரிசக்தி தேவையை மிகவும் திறமையாகவும், மலிவாகவும், பொறுப்புடனும் பூர்த்தி செய்ய இந்த முடிவு உதவும் என்று அமீரகம் நம்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தங்கும் இடங்களுக்கான புதிய வசதிகள்
தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MOHRE) அமீரகத்தில் தொழிலாளர் தங்குமிடங்கள் தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
- அனைத்து தொழிலாளர் தங்குமிடங்களிலும் தடையற்ற இலவச Wi-Fi வசதி வழங்கப்பட வேண்டும்.
- 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவ கிளினிக்குகள் இருக்க வேண்டும். அத்துடன் ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும்.
- தொழிலாளர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு, பொழுதுபோக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். விடுமுறை நாட்களில் சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
- முறையான மின்விளக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், சமையல் அறைகள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டாயம்.
- தொழிலாளர்கள் பணம் அனுப்புவதற்கும், மற்ற பணத் தேவைகளுக்கும் தங்குமிடங்களிலேயே நிதிச் சேவை வசதிகள் இருக்க வேண்டும்.
- தொழிலாளர்களின் தங்குமிடங்கள் தொழிற்சாலைகளுக்கு அருகிலும், போதிய போக்குவரத்து வசதி உள்ள இடத்திலும் அமைந்திருக்க வேண்டும்.
- தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு விதிகள் அடங்கிய கையேடுகள் அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும்.
ரூ. 10,000 கூடுதல் விமான கட்டணம்
2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்கள் விமானக் கட்டணமாக கூடுதலாக ரூ. 10,000 செலுத்த வேண்டும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, விமான நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இந்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் விமானக் கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது. இந்தத் தொகையை வரும் மே 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கு AED 309 மில்லியன் வழங்கல்
சர்வதேச தொழிலாளர் தினத்தை (மே 1) முன்னிட்டு, அபுதாபி நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், 2025ஆம் ஆண்டில் 12,536 தொழிலாளர்களின் நிதி உரிமைகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்து, AED 309 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, வணிக நிலைத்தன்மையையும் உறுதிசெய்து, சமச்சீரான மற்றும் நிலையான பணிச்சூழலை உருவாக்குவதில் அபுதாபியின் உலகளாவிய பொருளாதார மையமாக உள்ள நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும், இந்த வலுவான அமைப்பு சட்டத்தை துல்லியமாகவும் வெளிப்படையாகவும் அமல்படுத்தி, ஒப்பந்த உறவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய இரு தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதிசெய்து, பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குகிறது.
