அபுதாபியில் ஒரே ஆண்டில் 95% குறைந்த பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு!

அபுதாபியில் 2022ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் 172 மில்லியன் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறைந்தது

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை அபுதாபியில் தொடங்கியதிலிருந்து அதன் பயன்பாடு 95% குறைந்துள்ளதாக அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி (EAD) தெரிவித்துள்ளது.

இது பொதுமக்கள் இடையே உள்ள விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாட்டை தவிர்ப்பதற்கான உறுதியையும் எடுத்துக்காட்டுவதாக அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி கூறியுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைப்பதற்கான இந்த மைல்கல் நிலையான எதிர்காலத்தை நோக்கிய கூட்டு நடவடிக்கையின் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களிடம் கருத்து கணிப்பு 

பிளாஸ்டிக் பொருட்களில் பயன்பாட்டை குறைக்க மக்கள் தயார் நிலையில் உள்ளார்களா என்பதை ஆய்வு செய்ய செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை பொது கருத்துக் கணிப்பை அபுதாபி சுற்றுச்சூழல் அகாடமி நடத்தி வருகிறது. 

இதுகுறித்து அபுதாபி சுற்றுச்சூழல் அகாடமி கூறுகையில், இந்த ஆய்வு முடிவுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான எதிர்கால விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு உதவும். 

அபுதாபிக்கு கிடைத்த வெற்றி

  • ஓராண்டில் மட்டும் 172 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அபுதாபியில் தவிர்க்கப்பட்டுள்ளது. 
  • அபுதாபியில் நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறைந்துள்ளது. 
  •  மக்களிடையே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்து, மறுசுழற்சி பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

இதனால் ஏற்படும் நன்மைகள்

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதன் மூலம் மனிதன் மற்றும் விலங்குகளின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றது. கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது, வனவிலங்கு பாதுகாக்கப்படுகிறது. மொத்தத்தில் இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்துவதால், அடுத்த தலைமுறைக்கு சுத்தமான மற்றும் பசுமையான எதிர்காலம் கட்டமைக்கப்படும்.