துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து திருடிய AED 660,000 பணத்துடன் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இரண்டு கொள்ளையர்களை விமான நிலையத்தில் துபாய் காவல்துறை கைது செய்தது.
இரவில் நடந்த திருட்டு:
பர் துபாய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரத்தில், முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டின் பின்பக்க நுழைவாயிலுக்குச் சென்றுள்ளனர்.
கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தி கதவை உடைத்து உள்ளே நுழைந்து, AED 60,000 இருந்த நான்கு பணப் பெட்டிகளையும், பிரதான லாக்கரை உடைத்து, மேலும் AED 6,00,000 பணத்தைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
மறுநாள் அதிகாலை, கடையின் ஊழியர் ஒருவர் திருட்டு நடந்திருப்பதைக் கண்டு உடனடியாக துபாய் காவல்துறைக்கு (Dubai Police) தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன், பர் துபாய் காவல் நிலையத்திலிருந்து அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
அக்குழுவில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர். சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களுடன் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கருவிகள் மற்றும் தரவுப் பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்தி, கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.
மடக்கி பிடித்த காவல்துறை:
அதிகாரிகள் விசாரணையில், கொள்ளையர்கள் திருடிய பணத்துடன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து, பர் துபாய் காவல் நிலையமும், விமான நிலையப் பாதுகாப்பு கட்டுப்பாட்டுத் துறையும் விரைவாக தகவல் பரிமாற்றம் செய்து, ஒருங்கிணைந்து செயல்பட்டன.
இதன் விளைவாக, விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இரண்டு கொள்ளையர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். திருடப்பட்ட 6,60,000 திர்ஹம்ஸ் பணம் முழுவதும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைக்காகப் பொது வழக்குத் தொடரல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். துபாய் காவல்துறையின் இந்தச் சாதனை, அவர்களின் துரித செயல்பாடு மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டிற்குச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆன்லைனில் மோசடி வலையில் சிக்கிய நபரின் காரை 24 மணி நேரத்தில் துபாய் காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
