துபாயில் இந்த ஆண்டிற்கான `24H Dubai Series’ கார் பந்தயம் ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
இந்த 24 மணி நேரம் நடக்கவிருக்கும் கார் ரேஸ் போட்டியில் அஜித்குமாரின் ‘Ajith kumar Racing’ அணி பங்கேற்கவுள்ளது.
அஜித்குமார் தலைமையிலான அணியில் Fabian Duffeiux, Mathew Deutry, Cam McLeod என மூன்று ஓட்டுனர்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அணிக்கான கார்களை தயார் செய்வது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ‘BAS KOTEAN RACING’ என்ற மிகவும் பிரபலமான ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
உலகளவில் பல கார் ரேஸ் வீரர்கள் பங்கேற்கும் இந்த ரேஸில் இந்தியா சார்பில் அஜித் குமார் மட்டுமே பங்கேற்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் குமார் ரேஸிங் எங்கே நடக்கப்போகிறது?
“24H Dubai கார்” ரேஸ் போட்டி துபாயில் உள்ள Autodrome என்கிற சர்க்யூட்டில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட இந்த ரேஸ் போட்டியில் 42 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கார்பந்தயத்தில் ஒரு அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து காரை ஓட்டுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு லேப் முடிந்தவுடன், அடுத்த வீரர் மாற்றி கார் ஓட்ட வேண்டும்.
மேலும், 16 வளைவுகளுடன் இந்த ட்ராக்கின் லேப் 5.390 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ளது.
முக்கியமாக இந்த ட்ராக்கில் யார் வேண்டுமானாலும், கார் ஓட்டிவிட முடியாது. இதற்கு முன்பு ஏரோ டிரோம் நடத்தும் போட்டிகளிலோ, நோவிஸ் கேட்டகிரியிலோ பங்கு பெற்றவர்களால் மட்டும் தான் இதில் கார் ஓட்ட முடியும் எனக் கூறப்படுகிறது.
துபாய் 24H சீரிஸில் வெற்றி பெறுவது எப்படி?
24 மணிநேரமும் நடக்கப்போகிற இந்த ரேஸிங்கில் எந்த அணி அதிக கிலோமீட்டர் மற்றும் Laps-களை கடக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும்.
துபாய் Autodrom போட்டியை இலவசமாக காண அனுமதி
துபாய் Autodrom- இல் நடைபெறும் 24H சீரிஸ் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காண https://dubaiautodrome20.ae/ என்ற இணையப்பக்கத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்கள்.
24H பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்
கடந்த 7 ஆம் தேதி துபாயில் Autodrome சர்க்யூட்டில் அஜித் PORSCHE GT3 கப் காரை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்மந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகிய போது, அஜித்குமாருக்கு என்ன ஆனதோ எனப் பலரும் பயந்த நிலையில், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வித காயமுமின்றி அஜித் குமார் வெளியே வந்தார்.
இதுபோன்று பயிற்சியின் போது விபத்துக்கள் நடப்பது என்பது இயல்பானது தான் என்றாலும், அஜித்குமார் நலமுடன் இருப்பதாகவும், விபத்து நடக்கும் போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் காரை அஜித் ஓட்டினார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.
மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித் குமார்
இந்த நிலையில், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்பது போல் அஜித் குமார் மறு நாளே 1.30 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியது.
அதுமட்டுமின்றி இரண்டாம் கட்டமாக நடந்த தகுதிச் சுற்றிலும் அஜித் குமார் பங்கேற்று கார் ஓட்டியுள்ளார்.
