அமீரகத்தின் தேசிய உறுதிமொழி தினத்தை முன்னிட்டு அஜ்மான் வீதிகளில் ஒன்றுக்கு ஒருக்கிணைப்பு உறுதிமொழி வீதி எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
தேசிய உறுதிமொழி தினம்:
1971 ஜூலை 18 அன்று, அபுதாபி, துபாய், புஜைரா, அஜ்மான், ஷார்ஜா ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து, அமீரக அரசியலமைப்பில் கையெழுத்திட்டு நாட்டின் உருவாக்கத்தை அறிவித்தனர். இந்த நாள் தேசிய உறுதிமொழி தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய உறுதிமொழி தினம் என்பது அமீரகத்தில் கொண்டாடப்படும் நான்காவது தேசிய நிகழ்வாகும். அந்த வகையில் அமீரகத்தில் தேசிய உறுதிமொழி தினம் ஜூலை 18 அன்று கொண்டாடப்பட்டது.
வீதிக்கு பெயர் மாற்றம்:
இந்நிலையில், அஜ்மான் தனது தெருக்களில் ஒன்றுக்கு “அஹ்த் அல் இத்திஹாத்” எனப் பெயரிட்டுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரக அரசியலமைப்பின் மற்றும் யூனியன் பிரகடனத்தின் 54ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. “அஹ்த் அல் இத்திஹாத்” என்பதற்கு அரபு மொழியில் ஒருக்கிணைப்பு உறுதிமொழி என்று பொருள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்:
இந்த வீதி, அஜ்மானின் அல் ரகைப் 2 (Al Raqaib 2) பகுதிக்கு முக்கிய நுழைவாயிலாக அமைகிறது. இந்தப் பகுதியானது ஏற்கனவே “யுனைடெட் ஹோம்” (United Home) மற்றும் “1971 தெரு” (1971 Street) போன்ற எமிரேட்டின் வரலாறு மற்றும் தேசிய அடையாளத்துடன் தொடர்புடைய பெயர்களைக் கொண்ட இடங்களை உள்ளடக்கியது.
தேசிய நினைவுகளைப் போற்றும் முயற்சி
அஜ்மான் நகராட்சி மற்றும் திட்டமிடல் துறை ‘அஹ்த் அல் இத்திஹாத்’ தெருவைத் திறந்து வைத்துள்ளது. இதன் நோக்கம், நாட்டின் நீண்டகால நினைவுகளைப் போற்றுவதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளத்தை அதன் முக்கிய இடங்களில் நிலைநிறுத்துவதும் ஆகும்.
அஜ்மான் தனது நவீன அம்சங்களைப் பாரம்பரியத்துடன் இணைக்க முயல்வதால், தேசிய உணர்வைப் பறைசாற்றும் வகையில் இதேபோன்ற பெயரிடும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
