இந்தாண்டின் கடைசி சூப்பர் மூன்; அமீரகத்தில் எங்கெல்லாம் பார்க்கலாம்?

2025ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நாளை (நவம்பர் 5) வானில் தெரியும். 

சூப்பர் மூன் என்றால் என்ன?

சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும்போது, அது முழு நிலவு வழக்கத்தை விடப் பெரியதாகவும், பிரகாசமாகவும் தெரியும்.  அதற்குச் சூப்பர் மூன் என்று பெயர்.

கடைசி சூப்பர் மூன்

2025ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் எனப்படும் ‘பீவர் மூன்’ நவம்பர் 5 வானில் தெரியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறை, சந்திரன் பூமியில் இருந்து சுமார் 3,56,980 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.

மாலை 5:17 மணிக்குக் கிழக்குப் பக்கம் சந்திரன் உதிக்கும்போது, அது தங்க ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும். பிறகு மேலே செல்லச் செல்ல, அது வழக்கமான வெள்ளி நிறத்துக்கு மாறும்.

‘பீவர் மூன்’ 

நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வட அமெரிக்கப் பழங்குடியினர் வைத்த பெயர் இது. நவம்பர் மாதத்தில் தான் நீர் நாய்கள் (Beavers) குளிர் காலத்துக்காக அணைகளைப் பழுது பார்த்து, உணவைச் சேகரிக்கும். அதனால் இந்த முழு நிலவுக்கு ‘பீவர் மூன்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது.

அமீரகத்தில் எங்கு பார்க்கலாம்?

அமீரகத்தில் நிலவைப் பார்க்கச் சிறந்த இடங்கள் இந்த நிகழ்வைப் பார்க்க தொலைநோக்கி (Telescope) எதுவும் தேவையில்லை. 

துபாய்

அல் குத்ரா ஏரி (Al Qudra Lake): இங்கே வெளிச்சம் குறைவாக இருப்பதால், வானம் மிகவும் தெளிவாகத் தெரியும்.

அல் அவ்விர் செகண்ட் பார்க் (Al Awir Second Park): துபாய் வானியல் குழுவினர் (Dubai Astronomy Group) இங்கு ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.  அல் துரைய்யா வானியல் மையம் (Al Thuraya Astronomy Centre) மூலம் டிக்கெட்டுகளை  AED 100 முதல் AED 120-களுக்கு  பெறலாம். 

அபுதாபி

அல் சடீம் ஆய்வகம் (Al Sadeem Observatory) – அல் வாத்ஃபா அருகில்: தொலைநோக்கி ஆர்வலர்கள் நிலவின் பள்ளங்களையும் மலைகளையும் அருகில் பார்க்க இது சிறந்த இடம்.

ராஸ் அல் கைமா 

ஜெபல் ஜெய்ஸ் (Jebel Jais): அமீரகத்தின் மிக உயரமான சிகரம். இங்கிருந்து நகரத்தின் வெளிச்சங்களுக்கு மேலே நிலவின் அழகை ரசிக்கலாம்.

ஹட்டா (Hatta): ஹஜார் மலைகள் (Hajar Mountains): துபாயிலிருந்து 90 நிமிடப் பயணத்தில் உள்ள அழகிய இடம். வெளிச்சம் குறைவாக இருப்பதால், நிலவைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த காட்சி கிடைக்கும்.

அக்டோபர் 9 அன்று ஹண்டர் சூப்பர் மூன் எனப்படும் இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் வானில் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.