வீட்டை அலங்கரிக்கும் போட்டி முதல் துபாய் புத்தக கண்காட்சி வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

ஈத் அல் பித்ர் பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை!

அமீரகத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகை மார்ச் 19 அல்லது மார்ச் 20ஆம் தேதிகளில் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு  மற்றும் தனியார்  ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது 

அரசு ஊழியர்களுக்கு  மார்ச் 19 முதல் மார்ச் 22 வரையிலும், தனியார் ஊழியர்களுக்கு  மார்ச் 19 முதல் மார்ச் 21 வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதம் 30 நாட்கள் நீடித்தால், தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை மார்ச் 22 வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை  அலங்கரிக்கும் போட்டி

துபாயில்  கடந்த ஆண்டை போல் நடப்பு ஆண்டும் ரமலானை   முன்னிட்டு வீட்டை  அலங்கரிக்கும் போட்டி நடைபெறுகிறது. இதில்  வெற்றி பெறுபவர்களுக்கு AED 100,000 வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

போட்டியில் பங்கேற்க அமீரகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் (Theme) குடும்ப ஆண்டு (Year of Family) என்பதற்கு ஏற்ப, வீட்டை அழகாக அலங்கரித்து, சுவாரசியமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். 

வீடியோவை #Dubai_Best_Decorated_Ramadan_Homes_2026 என்ற ஹாஷ்டாக் பயன்படுத்தி, Brand Dubai-ஐ (@branddubai) டேக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். 

வீடியோவை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 11. இதில் முதல் பரிசாக AED 100,000, இரண்டாம் பரிசாக AED 80,000  மற்றும் மூன்றாம் பரிசாக AED 60,000  அறிவிக்கப்பட்டுள்ளது.

AED  150 மில்லியன்  நிதியுதவி வழங்கிய லுலு  குழுமம் 

லுலு  குழுமத்தின் (Lulu Group) தலைவரான யூசுப் அலி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக AED  150 மில்லியன்  நிதியுதவி வழங்கியுள்ளார்.

 இது குறித்து லுலு குழுமத்தலைவர் யுசுப் அலி, ”அமீரகம் 🇦🇪 இரக்கத்தின்  பிறப்பிடம். ஆதரவற்ற குழந்தைகளை  கவனித்துக்கொள்வது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு. ஒரு சமூகமாக நாம் அனைவரும் அவர்களுக்கு ஒரு குடும்பமாக இருக்கிறோம். இந்த முதலீடு அவர்களின் எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் உருவாக்க உதவும்”  என்று கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் ‘Mother of the Nation Endowment for Orphans’ என்று அழைக்கப்படுகிறது. இது அபுதாபி அவ்காஃப் (Awqaf Abu Dhabi) அமைப்பால் தொடங்கப்பட்டது. அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுகிறது.

முதல் முயற்சிலேயே லாட்டரியில் AED 5M வென்ற தமிழர்

அமீரகத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்த் கோவிந்தன் அமீரக லாட்டரியில் AED 5 மில்லியன் பரிசு வென்றுள்ளார். 

அமீரக லாட்டரியின் Lucky Day பிரிவில் AED 5 மில்லியன் பரிசை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை முருகானந்த் கோவிந்தன்   பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு பணிக்காக துபாய்க்கு  வந்த முருகானந்த் கோவிந்தன்  இதுவரை ஒருமுறை கூட லாட்டரி வாங்கவில்லை. தனது நண்பர் பாபு ராவ் என்பவருடன் சேர்ந்து AED 50 செலுத்தி வாங்கிய முதல் டிக்கெட்டிலேயே இந்த பரிசை வென்றுள்ளார்.

லாட்டரி டிக்கெட்டில் அவர் தனது மகளின் பிறந்த வருடம் (2015)  15, தனது திருமண நிச்சயதார்த்த தேதி 7 ஆகிய எண்கள் இருக்குமாறு தேர்வு செய்துள்ளார்.  

புத்தகக் கண்காட்சி துபாயில்!

ரமலானை முன்னிட்டு துபாயில் 95% தள்ளுபடியுடன் Big Bad Wolf என்ற புத்தகக் கண்காட்சி துபாய் ஸ்டுடியோ சிட்டியில் பிப். 26 தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது. 

உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான Big Bad Wolf என்ற புத்தகக் கண்காட்சி துபாய் ஸ்டுடியோ சிட்டியில் உள்ள சவுண்ட் ஸ்டேஜில் பிப். 26  முதல் மார்ச் 8 வரை நடைபெறுகிறது.

இதில்  புத்தகங்கள் வெறும் AED 2-இல் இருந்து தொடங்குவதாகவும், புத்தகங்கள் 95% வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமும் காலை 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும். நுழைவு இலவசம்.

TAGGED: