சாதி, மத வேறுபாடின்றி அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஆன்லைனில் திருமணம் செய்து கொள்ளும் புதிய வசதி அபுதாபியின் TAMM செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புரட்சிகரமான ஆன்லைன் சேவை:
அபுதாபி இப்போது உலகெங்கிலும் உள்ள தம்பதிகள் நேரில் வராமலேயே திருமணம் செய்துகொள்ள ஒரு புரட்சிகரமான ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அபுதாபி அரசின் TAMM (தம்) செயலி மூலம், வெறும் AED 800 செலவில் திருமணத்தை முடிக்க முடியும்.
இந்தச் சேவை அமீரக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள யார் வேண்டுமானாலும் அபுதாபியில் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
பயன்படுத்துவது எப்படி?
திருமணம் செய்ய விரும்புவார்கள் தங்கள் குடியுரிமை எதுவாக இருந்தாலும் ஆன்லைனில் இந்தச் சேவையைப் பெறலாம் என்று TAMM செயலியின் தலைவர் முகமது அல் அஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயல்முறை முழுவதுமே ஆன்லைனில் நடப்பதால், திருமணம் செய்துகொள்ள யாரும் அபுதாபிக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பயனர்கள் AED 800 செலுத்தி, ஆன்லைன் படிவங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து திருமணத்திற்கு பதிவு செய்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மெய்நிகர் திருமணம் ஏற்பாடு செய்யப்படும்.
மதச் சடங்குகள் இல்லாத திருமணம்:
அமீரகத்தில் வசிக்காத வெளிநாட்டு ஜோடிகள் திருமணம் செய்ய, நாட்டில் உள்ள ஒரு வழக்கறிஞர் அல்லது பிரதிநிதியை நியமிக்க வேண்டியது அவசியம். வளைகுடா நாடுகளில் மதச் சடங்குகள் இல்லாத திருமணத்தை (Non-Religious Marriage) வெளிநாட்டவர்களுக்கு அனுமதிக்கும் ஒரே நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பதை இந்த சேவை உறுதிப்படுத்துகிறது.
TAMM செயலி ஏற்கனவே அபுதாபி குடியிருப்பாளர்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை வழங்குகிறது. இப்போது திருமண வசதியையும் சேர்ப்பதன் மூலம், அபுதாபி அரசு தனது சேவைகளை எவ்வளவு தூரம் எளிமைப்படுத்தவும், உலகளாவிய அணுகலை உறுதிப்படுத்தவும் விரும்புகிறது என்பதை இந்த முயற்சி தெளிவாகக் காட்டுகிறது.
