துபாய் மற்றும் அபுதாபி இடையே AED 25 கட்டணத்தில் புதிய வழித்தடத்தை அறிமுகம் செய்துள்ளது துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்.
அமீரகத்தில் முக்கிய இருபெரும் நகரங்களாக உள்ள துபாய் மற்றும் அபுதாபி இடையே தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
அவர்களில் பலர் பொதுப் பேருந்தை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை துபாய் சாலைகள் & போக்குவரத்து ஆணையம் (RTA) அறிமுகம் செய்துள்ளது.
RTA-வின் புதிய சேவை:
துபாய் அல் குவோஸ் பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபியின் MBZ பேருந்து நிலையம் வரை இந்த புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துபாய் சாலைகள் & போக்குவரத்து ஆணையம், கேபிடல் எக்ஸ்பிரஸுடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது.
இந்தப் பயணத்திற்கு ஒரு நபருக்கு டிக்கெட் கட்டணமாக AED 25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் நோல் கார்டுகள், காண்டாக்ட்லெஸ் கார்டுகள் மற்றும் பணம் செலுத்தியும் டிக்கெட் பெறலாம்.
துபாய் – ஷார்ஜா
முன்னதாக கடந்த மே மாதத்தில், துபாய் மற்றும் ஷார்ஜா இடையே E308 பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதில் ஒரு பயணிக்கு டிக்கெட் கட்டணமாக AED 12 நிர்ணயிக்கப்பட்டது. இந்த பேருந்து சேவை துபாயில் உள்ள ஸ்டேடியம் பேருந்து நிலையத்தில் தொடங்கி ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பேருந்து நிலையத்தில் நிறைவடைகிறது.
ஆகஸ்ட் மாத இறுதியில், ஐந்து புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை RTA அறிவித்தது. மேலும் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் பேருந்து சேவை மாற்றியமைக்கப்பட்டது.
துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் 250க்கும் மேற்பட்ட இன்டர்சிட்டி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக அவை அனைத்திலும் இலவச Wi-Fi வசதி உள்ளது.
