வான வேடிக்கைகள், தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பு, கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இவ்வாண்டு கொண்டாட்டங்கள் வருகின்ற அக்டோபர் 25 முதல் நவம்பர் 07 வரை இருக்குமென்று துபாயில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
திட்டமிடப்பட்டிருக்கும் இந்த இரண்டு வாரங்களில் இசைக்கச்சேரிகள், இந்திய உணவு வகைகள், பிரத்தியேக வெளிப்புற சந்தைகள் என பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இவற்றின் மூலம் உலகளவில் தீபாவளியை கொண்டாட துபாய் ஓர் முக்கிய நகரமாக இருக்கும் என்று துபாயின் விழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனத்தின் (DFRE) அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகளும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்நிகழ்வுகளில் முதன்மையானதாக கருதப்படும் Noor – Festival of Lights எனும் நிகழ்வு அக்டோபர் 25 முதல் 27 வரை அல் சீஃப் பகுதியில் நடைபெறவுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதர் சதீஷ் குமார் சிவன் தெரிவித்தார்.
கலை நிகழ்ச்சிகள், சலுகைகள் என வரிசைக்கட்டும் தீபாவளி கொண்டாட்டங்கள்:
இந்தியாவில் முன்னணி விழா கண்காணிப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான TeamWork Arts ஏற்பாடு செய்யும் நூர் – விளக்குத் திருவிழா (Noor – Festival of Lights), இவ்விழா வண்ண விளக்குகள் கொண்டு கலை விழாக்கள் நடத்தி பிரமிப்பூட்டும் அனுபவங்களை வழங்க உள்ளது. மேலும், அழகிய தீபாவளி அலங்காரமும் கவர்ச்சிகரமான வான வேடிக்கை நிகழ்ச்சியும் இங்கு நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி அங்கு பொம்மலாட்ட ஊர்வலங்கள், நாடக நிகழ்ச்சிகள், இசை & கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், ஓவிய மற்றும் வடிவமைப்பு பயிற்சிகள், பாரம்பரிய இந்திய உணவுகள் மற்றும் பல விஷயங்கள் 1.8 கிலோமீட்டர் நடைபாதை முழுவதும் பரவியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் எல்லோரையும் உற்சாகமாக பங்கேற்க மனதார அழைக்கிறோம், இதனை வெற்றிகரமானதாக்க பல மால்கள், வணிகக் குழுக்கள் மற்றும் கலாச்சார அமைப்புகள் பணியாற்றுவதை பாராட்டுகின்றோம். மேலும் இவ்வாண்டு தீபாவளி அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம் என்று சதீஷ் சிவன் கூறினார்.
துபாய் பண்டிகை மற்றும் பொழுதுபோக்கு அமைப்பின் துணைத் தலைவரான மொஹமேட் பெராஸ் கூறுகையில் “தீபாவளித் திருநாள் துபாயில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஓர் பண்டிகையாகும். இது அனைவரும் குடும்பங்களுடன் இணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நேரமாகும், மேலும் உலகெங்கிலும் உள்ள அனைவரையும் துபாய் தனது துடிப்பான பன்முகத்தன்மை, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுடன் கொண்டாட அழைக்கிறது. துபாய் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய நகரமாக உள்ளது. தீபாவளி சிறப்பு சந்தைகள், வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்வுகளுடன் அனைவருக்கும் ஓர் சிறப்பான அனுபவத்தை ஏற்படுத்த துபாய் காத்துக்கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.
பிரமிப்பூட்டும் வானவேடிக்கை நிகழ்வு
குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து வானின் வண்ணக் கோலத்தை கீழ் காணும் இடங்களில் கண்டுகளியுங்கள்.
அல் சீஃப்: அக்டோபர் 25, இரவு 09:00 மணி
குளோபல் வில்லேஜ்: அக்டோபர் 25, 26 & நவம்பர் 01, 02
தங்கத்தின் மீதான சலுகைகள்
விழாக் காலங்களில் தங்கம் வாங்கும் கலாச்சாரம் அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது, இதற்காக துபாயின் முன்னணி நகைக் கடைகள் தங்களின் லேட்டஸ்ட் கலக்ஷன் நகைகள் மீது சலுகையை அறிவிக்க முன்வந்துள்ளன.
அக்டோபர் 20 முதல் நவம்பர் 07 வரை துபாய் ஜூவல்லரி குழுமம் (DJG) சார்பில் “Shine Bright this Diwali”என்ற சலுகையில் 50% வரை சலுகைகளை வழங்கப்படுகிறது.
Jawhara Jewellery குழுமம் சார்பில் AED 500-க்கும் மேல் தங்கம் வாங்குவோருக்கு AED 150,000 வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட 30 வாடிக்கையாளர்களுக்கு AED 5,000 மதிப்பிலான தங்கம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், துபாய் மால்கள் வாடிக்கையாளர்களுக்கு AED 100,000 மதிப்பிலான தங்கத்தை வெல்லும் வாய்ப்பை வழங்குகின்றன. இதற்காக அக்டோபர் 21 முதல் நவம்பர் 07 வரை மால்களில் உள்ள கடைகளில் AED 200-க்கு பொருள் வாங்குபவர்களில் 20 நபர்களை தேர்ந்தெடுத்து 24 கேரட் தங்க நாணயம் வழங்கவும், நவம்பர் 01 ஆம் தேதி AED 400-க்கும் மேல் பொருள் வாங்குபவர்களில் 10 நபர்களை தேர்ந்தெடுத்து பிரீமியம் சாக்லேட் பெட்டியை பரிசளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிற சலுகைகள்
பல்வேறு மால்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் வீட்டு அலங்காரப் பொருட்கள் மீது AED 75,000 பரிசும், அரை கிலோ தங்கம், தங்கம் மீது 5% கேஷ்பேக் போன்றவற்றை வழங்குகின்றன. கூடுதலாக பேஷன், கார்ப்பரேட் பரிசுப் பெட்டிகள், பண்டிகை அலங்காரம் மற்றும் இனிப்புகள் மீது 10X ஷாப்பிங் புள்ளிகளும் வழங்கப்படுகிறது. முன்னணி விற்பனையாளர்கள் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கேட்ஜெட்டுகள் மீது 50% சலுகையும், இலவச தங்க நாணயம், ஆடம்பர பரிசுகள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.
நிறைய மால்கள் பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கின்றன. “Diwali on Wheels” எனும் அலங்கார வாகனங்கள் புர் துபாய், டெய்ரா, கராமா மற்றும் ஊத் மேத்தா போன்ற இடங்களில் வலம் வந்து இலவச GIVEAWAY-வை வழங்குகின்றன.
