துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற துபாய் ரன்: நன்றி தெரிவித்த இளவரசர்!

நவ.23 அன்று நடைபெற்ற துபாய் ரன் (Dubai Run) நிகழ்ச்சியில் 307,000 பேர் பங்கேற்றனர். 

துபாய் ரன்

துபாயின் வருடாந்திர ஃபிட்னஸ் சேலஞ்ச் (Dubai Fitness Challenge) நிகழ்வின் 7-வது ஆண்டின் ஒரு பகுதியாக, துபாய் ரன் (Dubai Run) நிகழ்ச்சி நவ.23 அன்று காலை நடைபெற்றது. இதில் பெரியவர்கள், சிறுவர்கள், உள்நாட்டினர், வெளிநாட்டினர் என மொத்தம் 307,000 பேர் பங்கேற்று, கடந்த ஆண்டின் எண்ணிக்கையை முறியடித்து புதிய சாதனையைப் பதிவு செய்தனர்.

இந்த ஓட்ட நிகழ்ச்சி தொடங்குவதற்காக, ஷேக் சயீத் சாலையின் ஒரு பகுதி  தற்காலிகமாக மூடப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சி 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

மியூசியம் ஆப் ஃப்யூச்சர் (Museum of the Future) அருகில் தொடங்கிய ஓட்டம், துபாய் ஒபெரா, புர்ஜ் கலீபா, துபாய் கால்வாய் வழியாக சென்று, துபாய் மாலில் நிறைவடைந்தது. பங்கேற்றவர்களில் பலர் ஊதா நிற பனியன் மற்றும் கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்தனர்.

துபாய் ரன் நிகழ்ச்சியில் துபாய் காவல்துறையின் சூப்பர் கார்கள் மற்றும் ‘தலாபாத்’ மோட்டார் சைக்கிள் டெலிவரி ஊழியர்கள் முதலில் சென்றனர். பாதுகாப்புக்காக துபாய் காவல்துறை சாலையின் போக்குவரத்தைத் தடை செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வயது வரம்பு இன்றி, 4 மாத குழந்தை முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

தமிழகத்தைச் சேர்ந்த பலரும் இதில் கலந்து கொண்டனர். குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து தனது மகனைக் காண வந்திருந்த 70 வயது மதிக்கத்தக்க அப்துல் கபூர், அவரது மகன் இப்ராஹிம் மற்றும் பேரன்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நன்றி தெரிவித்த இளவரசர் 

துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனது சமூக வலைதளப் பக்கத்தில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 307,000 பேருக்கும் நன்றி தெரிவித்து, மக்களை ஊக்குவிப்பதை துபாய் எப்போதும் நிறுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.