ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிநாட்டிற்கோ அல்லது தாய் நாட்டிற்கோ செல்ல திட்டமிடும்போது, உங்கள் மீது ஏதேனும் நிதி தொடர்பான சிக்கல்கள், கிரிமினல் வழக்குகள் அல்லது நிர்வாகத் தடைகள் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிய துபாய் அரசு எளிய வழிமுறைகளை வழங்கியுள்ளது.
பயணத் தடை உள்ளதா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் நாடு திரும்பும் முன்போ அல்லது விடுமுறைக்குச் செல்லும் முன்போ தங்களுக்குத் தெரியாமல் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது மிக அவசியம்.
சிறிய அளவிலான அபராதங்கள், வங்கிப் பிரச்சனைகள் அல்லது கிரிமினல் வழக்குகள் காரணமாக சில நேரங்களில் அதிகாரிகள் பயணத் தடை (Travel Ban) விதிக்கக்கூடும். விமான நிலையத்திற்குச் சென்ற பிறகு தர்மசங்கடமான சூழ்நிலைகளைத் தவிர்க்கவும், உங்கள் பயணம் சுமூகமாக அமைவதை உறுதி செய்யவும், துபாய் அரசு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கியுள்ளது.
உங்கள் எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) அல்லது பாஸ்போர்ட் விவரங்களைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட தளங்கள் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம்:
1. துபாய் காவல்துறை (Dubai Police)
- துபாய் காவல்துறை இணையதளம் அல்லது மொபைல் ஆப் (App) மூலம் மிக எளிதாகச் சரிபார்க்கலாம்.
- துபாய் காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- ‘Criminal Status of Financial Cases’ என்ற சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் எமிரேட்ஸ் ஐடி எண்ணை உள்ளிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளைத் தெரிந்துகொள்ளலாம்.
2. உள்துறை அமைச்சகம் (Ministry of Interior – MOI)
- அமீரகத்தின் உள்துறை அமைச்சக இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம்.
- www.moi.gov.ae என்ற தளத்திற்குச் செல்லவும்.
- அங்குள்ள ‘eServices’ பகுதிக்குச் சென்று, ‘Visa Inquiry‘ அல்லது ‘Entry Permit Status’ மூலம் உங்கள் விசா மற்றும் பயணத் தடை விவரங்களைச் சரிபார்க்கலாம்.
3. ICP ஸ்மார்ட் சர்வீசஸ் (ICP Smart Services)
- இது ஃபெடரல் அடையாள அட்டை மற்றும் குடியுரிமைக்கான அதிகாரப்பூர்வ தளமாகும்.
- smartservices.icp.gov.ae என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- உங்கள் UAE Pass மூலம் லாக்-இன் செய்து, ‘Travel Report’ அல்லது உங்கள் தற்போதைய நிலையை (Status) சரிபார்க்க விண்ணப்பிக்கலாம்.
ஏன் இதைச் சரிபார்க்க வேண்டும்?
வங்கிக் கடன், வாடகை பாக்கி, அல்லது குற்ற புகார்கள் காரணமாக உங்கள் பெயரில் தெரியாமல் கூட பயணத் தடை விதிக்கப்பட்டிருக்கலாம். விமான நிலையம் செல்வதற்கு முன்பே இதைச் சரிபார்ப்பது தேவையற்ற அலைச்சலையும் மன உளைச்சலையும் தவிர்க்க உதவும்.
