குளோபல் வில்லேஜில் ஒரு டிக்கெட் விலையில் நான்கு டிக்கெட்
துபாய் குளோபல் வில்லேஜில் ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஒரு டிக்கெட் விலைக்கு நான்கு டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. அமீரகத்தில் நடப்பு ஆண்டு குடும்ப ஆண்டாக கொண்டாடப்படுவதையொட்டி துபாய் குளோபல் வில்லேஜில் ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஒரு டிக்கெட் விலைக்கு (AED 30) நான்கு டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
நான்கு டிக்கெட்டுகளுக்கு மேல் கூடுதல் டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் AED 7.50 கட்டணத்தில் கிடைக்கும். இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே டிக்கெட் கவுண்டர்களில் மட்டுமே இந்த டிக்கெட் கிடைக்கும்.
பணக்கார யாசகர்கள் கைது!
ரமலான் மாதத்தையொட்டி துபாயில் யாசகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இருவரிடம் இருந்து AED 45,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், துபாயில் பல்வேறு பகுதிகளில் யாசகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பு பணியில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் வெவ்வேறு பகுதிகளில் யாசகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இருவரிடம் இருந்து AED 45,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
யாசகம் பெறுபவர்களை கண்டால் துபாய் காவல்துறையின் 901 என்ற எண்ணிற்கோ அல்லது ‘Police Eye’ செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம். துபாயில் யாசகம் பெறுவது சட்டப்படி குற்றம். தனிநபர் யாசகம் எடுத்தால் AED 5,000 அபராதம் மற்றும் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
யாசகம் எடுக்கும் கும்பலை நடத்துபவர்களுக்குக் குறைந்தபட்சம் 6 மாத சிறைத்தண்டனையும், AED 100,000 அபராதமும் விதிக்கப்படும். முறையான திட்டமிடப்பட்ட யாசகம் எடுக்கும் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
குழந்தைகள் தொழுகைக்கு வருவதை ஊக்குவிக்கும் முயற்சி
ரமலான் மாதத்தில் குழந்தைகள் தராவீஹ் தொழுகைக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில், துபாயில் உள்ள 300 மசூதிகளில் அவர்களுக்கென சிறப்பு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரமலான் மாதத்தில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தராவீஹ் தொழுகைக்கு வருவதை ஊக்குவிக்க கடந்த ஆண்டை போல் Ayal Al-Freej என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் துபாயில் உள்ள 300 மசூதிகளில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக சிறப்பு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் ஒவ்வொரு முறையும் தராவீஹ் தொழுகைக்கு வரும் போது பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் வைக்கப்படும்.
மேலும், குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்குவதற்காக ஐஸ்கிரீம் வங்கிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொழுகைக்கு வரும் போது சிறுவர்கள் கந்துரா மற்றும் குத்ராவிலும், சிறுமியர் தேசிய உடை மற்றும் ஹிஜாப் அணிந்தும் வர வேண்டும்.
ரமலான் மாதம் முழுவதும் பார்க்கிங் இலவசம்
துபாயில் உள்ள மசூதிகளின் வாகன நிறுத்துமிடங்களில் வழிபாட்டாளர்கள் தங்கள் வாகனங்களை ரமலான் மாதம் முழுவதும் 24/7 இலவசமாக நிறுத்தலாம் என்று பார்க்கின் அறிவித்துள்ளது.
அமீரகத்தில் புனித ரமலான் மாதம் பிப்.18 முதல் தொடங்கிய நிலையில் துபாயில் உள்ள மசூதிகளின் வாகன நிறுத்துமிடங்களில் வழிபாட்டாளர்களுக்கு 24/7 இலவச பார்க்கிங் வசதியை பார்க்கின் (Parkin) வழங்கியுள்ளது. இச்சலுகை ரமலான் மாதம் முழுவதும் தொடரும்.
மசூதிகளுக்காக ஒதுக்கப்பட்ட M மற்றும் MP குறியீடு கொண்ட பார்க்கிங் இடங்கள், ரமலான் மாதம் முழுவதும் 24 மணிநேரமும் இலவசமாக இருக்கும். ரமலான் காலத்தில் தொழுகைக்கு வரும் மக்கள் சிரமமின்றி வாகனங்களை நிறுத்த இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளை விடுவிக்க அதிபர் உத்தரவு!
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அமீரக சிறைகளில் உள்ள 1,440 கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது அவர்கள் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கான அபராதங்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
அமீரகத்தில் இஸ்லாமிய பண்டிகைகளையொட்டி சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ரமலானை முன்னிட்டு அமீரக சிறைகளில் உள்ள 1,440 கைதிகளை விடுவிக்க மாண்புமிகு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
