மலிவு விலை தங்கத்தை அறிமுகப்படுத்திய துபாய்: விலை எவ்ளோ தெரியுமா?

அமீரகத்தில் முதல் முறையாக 14 கேரட் தங்கத்தை துபாய் ஜுவல்லரி குழுமம் துபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமீரகத்தில் தற்போது விற்கப்படும் மிகவும் மலிவு விலையுடைய தங்கமாகும். ஒரு கிராம் விலை AED 301.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை தங்கம்:

தங்கத்தின் விலை உலகளவில் தினமும் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க நகைகளை இன்னும் அதிக மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துபாய் ஜூவல்லரி குரூப் (Dubai Jewellery Group), இதுவரை இல்லாத வகையில், 14 காரட் (14K) தங்கத்தின் விலையை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட 14K தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு AED 301.75 ஆகும். இது துபாயில் விற்கப்படும் தங்க வகைகளிலேயே மிகவும் மலிவானதாகும். 

விலை ஒப்பீடு:

இந்த 14K தங்கம், மிகவும் தூய்மையான 24K தங்கத்தின் விலையை (AED 512.25/கிராம்) விட AED 210.5 குறைவாக உள்ளது. தற்போது அதிகம் விற்கப்படும் 18K தங்கத்தை விடவும் (AED 389.75 /கிராம்) இது AED 88 குறைவு என துபாய் ஜூவல்லரி குரூப் தரவுகள் தெரிவிக்கின்றன. 

தங்கத்தின் வரலாறு காணாத விலை உயர்வால், துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாடிக்கையாளர்கள், மலிவு விலையில் நகைகளை வாங்க, 18K மற்றும் 21K போன்ற குறைந்த கேரட் கொண்ட தங்க வகைகளை நாடத் தொடங்கினர்.

இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டே, மிகவும் குறைந்த கேரட் ஆன 14K-க்கான அதிகாரப்பூர்வ விலையை துபாய் ஜூவல்லரி குரூப் வெளியிட்டுள்ளது. இந்த 14K தங்கத்திற்கான அதிகாரப்பூர்வ விலை, அடுத்த வாரம் முதல் கடைகளில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGGED: