சுகாதாரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் துபாயில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல் வாகனங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட 8 நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க “Eltizam” என்ற புதிய செயலி துபாய் நகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்க Eltizam App
உலகின் மிக தூய்மையான நகரங்களில் ஒன்றாக விளங்கும் துபாயை சுகாதாரத்தில் மேலும் வலுப்படுத்தும் முயற்சியில், பொது சுகாதார விதிகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க “Eltizam” செயலியை நகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியின் வெளியீடு 2024ஆம் ஆண்டின் துபாய் சட்டம் எண் (19) ஐ செயல்படுத்துவதன் ஒரு பகுதியாகும். இந்த சட்டம், பொது சுத்தம் தொடர்பான விதிகளை அமல்படுத்த அதிகாரம் பெற்ற பணியாளர்களின் சட்டபூர்வ அந்தஸ்தை நிர்ணயிக்கிறது. இதன் நோக்கம் விதிகளை பின்பற்ற செய்வது, சட்டத்தில் தெளிவை கொண்டு வருவது, மேலும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பது.
8 விதிமீறல்களுக்கு புகார் அளிக்கலாம்
இந்த செயலி, அதன் முதல் கட்டமாக நகரின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படும் எட்டு முக்கிய சுகாதார விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க அனுமதி அளிக்கிறது.
- பொது இடங்களில் எச்சில் துப்புதல்
- சூயிங் கம்மை துப்புதல்
- பொது இடங்களில் குப்பை கொட்டுதல்
- கடல், கடற்கரைகள் அல்லது துறைமுகங்களில் கரிம அல்லது பொதுக் கழிவுகளைக் கொட்டுதல்
- அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வாகனம் கழுவிய நீரை ஊற்றுதல்
- அனுமதி இல்லாத இடங்களில் நெருப்பு மூட்டுதல் அல்லது பார்பிக்யூ செய்தல்
- பொது இடங்களை இழிவுபடுத்தும் துண்டு பிரசுரங்கள் அல்லது விளம்பரங்களை ஒட்டுதல்
- செல்லப்பிராணிகள் வெளியிடும் கழிவுகளை சுத்தம் செய்யாமல் இருப்பது
எப்படி புகார் தெரிவிப்பது?
இந்த எட்டு செயல்களில் ஏதேனும் ஒரு செயலை கண்டால் அதை புகைப்படம் எடுத்து சம்பவம் நடந்த இடத்தை டேக் செய்து, அதன் பின் நீங்கள் மேலும் தெரிவிக்க வேண்டிய குறிப்புகளை எழுதி உங்கள் புகாரை பதிவிடலாம்.
நகர்ப்புற நல்வாழ்வை மேம்படுத்தும் முயற்சி
துபாய் நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் மர்வான் அகமது பின் காலிதா கூறுகையில், “நகரின் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான துபாய் நகராட்சியின் முயற்சியாக “Eltizam” செயலி தொடங்கப்பட்டுள்ளது. துபாயின் அழகை பாதுகாக்கவும், உலகின் மிக அழகான மற்றும் தூய்மையான நகரமாக அதன் நிலையை உயர்த்துவதற்கான எங்கள் தொலைநோக்கு பார்வையை இந்த செயல் பிரதிபலிக்கிறது என்றார்.
