துபாயில் 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிய வகை இளஞ்சிவப்பு வைரத்தை (Pink Diamond) கொள்ளையடித்த 3 ஆசிய நாட்டவர்களை துபாய் காவல்துறை 8 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்துள்ளது.
வைர வியாபாரியை ஏமாற்றிய கும்பல்!
துபாய் மீடியா அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு வருடமாக வைர வியாபாரியிடம், இளஞ்சிவப்பு வைரத்தை வாங்க தங்களிடம் ஒரு பெரும் பணக்கார வாடிக்கையாளர் இருப்பதாகத் தெரிவித்து, அவரை ஏமாற்றி வந்துள்ளது ஆசியாவைச் சேர்ந்த மூன்று பேர் அடங்கிய கும்பல். அவரின் நம்பிக்கையைப் பெற, அவர்கள் ஆடம்பரமான கார்களை வாடகைக்கு எடுத்து, உயர்தர ஹோட்டல்களில் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தனர். மேலும், வைரத்தை சரிபார்க்க ஒரு புகழ்பெற்ற வைர நிபுணரையும் வாடகைக்கு அமர்த்தினர். அவர்களின் தந்திரமான நடிப்பை நம்பிய நகை வியாபாரி, தனது கடையிலிருந்து வைரத்தை வெளியே கொண்டு வர சம்மதித்துள்ளார்.
வைரத்தை திருடிய கும்பல்!
பின்னர், கும்பல் அந்த “வாடிக்கையாளரை” சந்திப்பதற்காக, நகை வியாபாரியை ஒரு வில்லாவுக்கு அழைத்துச் சென்றது. வைரம் காண்பிக்கப்பட்டவுடன், அவர்கள் அதை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
துபாய் காவல்துறை அதிரடி!
வைர வியாபாரி இந்த திருட்டு குறித்து உடனடியாக துபாய் காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில், ஒரு சிறப்புப் படையை அமைத்து, மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குற்றப் புலனாய்வுத் துறை (CID), குற்ற செயலில் ஈடுபட்ட மூன்று ஆசிய நபர்களையும் அடையாளம் கண்டு, கண்டுபிடித்தது.
திருட்டுக்குப் பிறகு அவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் பிரிந்திருந்தனர். பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது வைரம், ஒரு குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு ஆசிய நாட்டிற்கு கடத்தப்பட இருந்தது.
ஃபேன்சி இன்டென்ஸ் வைரம்!
21.25 காரட் எடையும், மிக உயர்ந்த தூய்மையையும் கொண்ட இந்த இளஞ்சிவப்பு வைரம், உலகின் மிக அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் விகிதம் உலகளவில் வெறும் 0.01 சதவீதம் மட்டுமே. இது ‘ஃபேன்சி இன்டென்ஸ்’ (Fancy Intense) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தெளிவு, வடிவம், மற்றும் பளபளப்பு ஆகியவை Excellent என மதிப்பிடப்பட்டுள்ளன.
காவல்துறைக்கு, வைர வியாபாரி பாராட்டு!
துபாய் காவல்துறையின் விரைவான நடவடிக்கையை பாராட்டிய வைர வியாபாரி, தான் 999 என்ற எண்ணிற்கு அழைத்தபோது, சில நிமிடங்களில் பல காவல்துறைக் குழுக்கள் வந்து விசாரணையைத் தொடங்கியது நம்பிக்கையை அளித்ததாகவும், மறுநாள் காலையிலேயே, குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, வைரம் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2005 முதல் துபாயில் தொழில் செய்து வரும் அவர், இந்த சதித்திட்டத்தால் தான் ஏமாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், தனது தொழில்துறை சகாக்களையும் அதிகாரபூர்வமான பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.
“துபாய், வைர வர்த்தகத்திற்கு ஒரு பாதுகாப்பான உலகளாவிய மையமாக மாறியுள்ளது. இதை சாத்தியமாக்கிய தரங்களைப் பாதுகாப்பது முக்கியம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
