ஓட்டுநர்கள் ஓய்வெடுத்துவிட்டு வாகனம் ஓட்ட துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்!

தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டுவது விபத்துக்கு வழிவகுக்கும் என துபாய் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேக் முகமது பின் சயீத் சாலையில் 2 லாரிகள் மோதிய விபத்தில், ஒரு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என கண்டறியப்பட்டதால்  இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சிறு தவறும் பெரும் ஆபத்து

துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத்துறையின் இயக்குநர், பிரிவின் தலைவர் ஜூமா சலேம் பின் சுவைதன், பேசுகையில், “வாகனம் ஓட்டும்போது ஏற்படும் மிகச் சிறிய தவறுகள் கூட, தீவிரமான மற்றும் உயிரைப் பறிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக,  வாகனம் ஓட்டும் போது தூங்கிவிடுவதுதான்,  உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும் போக்குவரத்து விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாகும்,” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு விபத்து, இந்த எச்சரிக்கையின் அவசியத்தை உணர்த்துகிறது. ஷேக் முகமது பின் சயீத் சாலையில், அபுதாபி நோக்கிச் செல்லும் வழியில், அல் மக்தூம் விமான நிலைய ரவுண்டானாவுக்கு சற்று முன்னால் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் ஒரு ஓட்டுநர் காயமடைந்தார்.

விசாரணையில், விபத்துக்குள்ளான லாரிகளில் ஒன்றின் ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்தது. இதனால், அவர் முன்னால் சென்ற லாரி மீது மோதினார். இந்த விபத்து காரணமாக ஓட்டுநர் காயமடைந்ததோடு மட்டுமல்லாமல், சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது. நிலைமையைக் கட்டுப்படுத்த, போக்குவரத்தை மாற்று வழிகளுக்குத் திருப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

காவல்துறையின் உடனடி நடவடிக்கை

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், போக்குவரத்து விபத்து நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டனர். அதே நேரத்தில், போக்குவரத்து குழுவினர், வாகன நெரிசலைத் திறமையாகக் கையாண்டு, ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவாகச் செல்வதை உறுதி செய்தனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தை விரைவில் அகற்றி, இயல்பான போக்குவரத்து நிலையை மீட்டெடுக்க மீட்புக் குழுக்கள் உடனடியாக பணியாற்றினர். 

இதனைத் தொடர்ந்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத்துறையின் இயக்குநர் பின் சுவைதன், வாகன ஓட்டிகள் அனைவரும் பாதுகாப்பான பயணத்திற்கு கடைப்பிடிக்க வேண்டியவற்றை வலியுறுத்தியுள்ளார்.

  • வாகனம் ஓட்டுவதற்கு முன், கட்டாயம் போதுமான ஓய்வு எடுத்து,  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
  • ஓட்டுநர்கள் மற்றும் பிற சாலைப் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் சோர்வை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
  • எப்போதும் உங்கள் பாதையில் மட்டுமே (Lane) பயணிக்கவும்.
  • சோர்வாக உணர்ந்தால், தாமதிக்காமல் வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி, சிறிது ஓய்வு எடுத்த பிறகே பயணத்தைத் தொடர வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், பொதுமக்கள் கடுமையான விபத்துகளைத் தடுக்கலாம் என்றும், சாலையில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம் என்றும் துபாய் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

TAGGED: