துபாயில் 15 கி.மீ.க்கு தானியங்கி போக்குவரத்து மண்டலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டலம் நிலம் மற்றும் நீர் வழிப் போக்குவரத்தில் செயல்பட உள்ளது.
தானியங்கி போக்குவரத்து மண்டலம்
துபாயில் போக்குவரத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், 15 கிலோமீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான தானியங்கி போக்குவரத்து மண்டலத்தை (Dubai Autonomous Zone – DAZ) துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. இந்த மண்டலத்தில் நிலம் மற்றும் நீர் வழிகளில் முற்றிலும் ஓட்டுநர் இல்லா வாகனங்கள் மூலம் பயணிக்க முடியும்.
எங்கே அமையவுள்ளது?
இந்த தானியங்கி மண்டலம், துபாய் கிரீன் லைன் மெட்ரோவில் உள்ள க்ரீக் நிலையம் முதல் துபாய் க்ரீக் ஹார்பர் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி வரையிலான முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.
தானியங்கி போக்குவரத்து முறைகள்:
துபாயின் எதிர்காலப் போக்குவரத்தை நோக்கிய இந்த மண்டலத்தில், மொத்தம் ஏழு வகையான ஓட்டுநர் இல்லா போக்குவரத்து முறைகள் ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளன. அவையாவன:
- ஏற்கனவே இயங்கி வரும் ஓட்டுநர் இல்லாத துபாய் மெட்ரோ
- ரோபோடாக்ஸி (RoboTaxi)
- ரோபோபஸ் (RoboBus)
- தானியங்கி படகு (Autonomous Abra)
- ஓட்டுநரில்லா ஷட்டில் பேருந்து (Self-Driving Shuttle Bus)
- ஓட்டுநர் இல்லாத சரக்கு வாகனங்கள் (Driverless Logistics Vehicles)
- தானியங்கி தெரு துப்புரவு வாகனங்கள் (Autonomous Sweepers)
பயண வழி:
புதிய போக்குவரத்து முறையைப் பற்றி விளக்கிய துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணைய அதிகாரியான அஹ்மத் பஹ்ரோஸ்யன், “இந்த மண்டலத்திற்குள் நீங்கள் மெட்ரோ மூலமாக வருவீர்கள். க்ரீக் நிலையத்தில் இறங்கிய பின், நீங்கள் தானியங்கி படகை எடுத்து துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி அல்லது துபாய் க்ரீக் ஹார்பருக்குச் செல்லலாம். அங்கிருந்து உங்கள் இலக்கை அடைய ஒரு ஷட்டில் பேருந்தை பயன்படுத்தலாம். இந்த மண்டலத்தில் உள்ள போக்குவரத்து அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும்” என்று தெரிவித்தார்.
ரோபோடாக்ஸிகள் எப்போது வரும்?
இந்தத் திட்டத்தின்படி, ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்ஸி சேவை 2026ஆண்டின் முதல் காலாண்டில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அனைத்து ஏழு போக்குவரத்து முறைகளும் 2027ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.
இந்தத் திட்டமானது, 2030ஆம் ஆண்டிற்குள் துபாயில் உள்ள மொத்தப் போக்குவரத்தில் 25 சதவீதத்தை ஸ்மார்ட் மற்றும் ஓட்டுநர் இல்லாததாக மாற்ற வேண்டும் என்ற இலக்கின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
