துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் எமார் ப்ராபெர்ட்டீஸ் (Emaar Proberties) இணைந்து, புர்ஜ் கலீஃபா / துபாய் மால் மெட்ரோ நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளன.
பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விரிவாக்கத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் பயணிகளை கையாளும் திறன் 7,250-லிருந்து 12,320 ஆக அதிகரிக்கும். இது 65% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், புத்தாண்டு கொண்டாட்டங்கள், பொது விடுமுறைகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் போன்ற சமயங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த விரிவாக்கத் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
விரிவாக்க விவரங்கள்:
- நிலையத்தின் பரப்பளவு 6,700 சதுர மீட்டரிலிருந்து 8,500 சதுர மீட்டராக விரிவாக்கப்படும்.
- திட்டம் முடிந்ததும், தினசரி 2.2 லட்சம் பயணிகள் பயணிக்கக்கூடியதாய் இருக்கும்.
- நடைபாதைகள், நடைமேம்பாலங்கள், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மேம்படுத்தப்படும்.
- கூடுதல் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட்கள் பொருத்தப்படும்.
- நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் தனித்தனியாக அமைக்கப்படும்.
- கட்டண வழிச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
- வருவாயை உயர்த்தும் வகையில் வணிக வளாகங்களும் விரிவாக்கப்படும்.
RTA தலைமை இயக்குநரும், நிர்வாக குழுத் தலைவருமான மத்தார் அல் தையர், இந்த விரிவாக்கம் மெட்ரோ சேவைகளுக்கு அதிகரித்த வரவேற்புக்கு ஏற்ப விரிவாக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
பயணிகள் வளர்ச்சி புள்ளிவிவரம்:
2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்டதிலிருந்து, புர்ஜ் கலீஃபா/துபாய் மால் மெட்ரோ நிலையத்தின் பயன்பாடு சீராக வளர்ந்து வருகிறது, என்று அல் டேயர் மேலும் தெரிவித்தார். 2013 இல் 6.13 மில்லியனாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, 2016 இல் 7.254 மில்லியனாகவும், 2019 இல் 7.885 மில்லியனாகவும் உயர்ந்துள்ளது. இது தினசரி சராசரியாக 43,000 பேர் பயன்படுத்துவதை காட்டுகிறது.
2022 இல், இந்த எண்ணிக்கை 8.827 மில்லியனாக உயர்ந்தது, 2023 இல் 10.202 மில்லியனை தாண்டியது. மேலும் 2024 இல் 10.577 மில்லியனைத் தாண்டி, தினசரி சுமார் 58,000 பேர் பயன்படுத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, துபாய் தனது போக்குவரத்து வலையமைப்பில் புதிதாக நீல நிற வழித்தட மெட்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
