புத்தாண்டு கொண்டாட்டம்: துபாயில் சாலைகள் மூடல் மற்றும் மெட்ரோ ரயில் நேரங்கள் அறிவிப்பு!

2026ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, துபாயின் புர்ஜ் கலீஃபா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

டிசம்பர் 31, 2025 அன்று மதியம் முதலே சாலைகள் மூடப்பட உள்ளதால், பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சாலைகள் மூடப்படும் நேரங்கள்

போக்குவரத்து மாற்றங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 4:00 மணி முதல் படிப்படியாக அமலுக்கு வரும்.

மாலை 4:00 மணி:

அல் அஸாயல் ஸ்ட்ரீட் (Al Asayel Street), ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டு (Sheikh Mohammed bin Rashid Boulevard), புர்ஜ் கலீஃபா ஸ்ட்ரீட் (Burj Khalifa Street), அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் (Al Mustaqbal Street), லோவர் பைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் (Lower Financial Centre Street) ஆகியவை மூடப்படும்.

இரவு 8:00 மணி: 

அல் சுகூக் ஸ்ட்ரீட் (Al Sukook Street) மூடப்படும்.

இரவு 9:00 மணி: 

அப்பர் பைனான்சியல் ஸ்ட்ரீட் சாலை (Upper Financial Centre Street) மூடப்படும்.

இரவு 11:00 மணி: 

நகரின் முக்கிய சாலையான ஷேக் சயித் சாலை (Sheikh Zayed Road) பகுதியாக மூடப்பட உள்ளது.

மெட்ரோ மற்றும் டிராம்: 

சாலைகள் மூடப்படுவதால் அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க, பொது போக்குவரத்து சேவைகள் கூடுதல் நேரம் இயங்கும்.

மெட்ரோ ரயில்: டிசம்பர் 31 காலை 5:00 மணி முதல் ஜனவரி 2 நள்ளிரவு 12:00 மணி வரை தொடர்ந்து 43 மணிநேரம் ரயில்கள் இயங்கும்.

டிராம் சேவை: டிசம்பர் 31 காலை 6:00 மணி முதல் ஜனவரி 2 அதிகாலை 1:00 மணி வரை செயல்படும்.

புர்ஜ் கலீஃபா/துபாய் மால் மெட்ரோ நிலையம் மாலை 5:00 மணிக்கு மூடப்படும். பயணிகள் அருகில் உள்ள மற்ற நிலையங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வாகன நிறுத்தம் மற்றும் இலவச பேருந்துகள்

சொந்த வாகனங்களில் வருபவர்கள் ‘எமார்’ (Emaar) பகுதிகளில் உள்ள 20,000-க்கும் மேற்பட்ட பார்க்கிங் வசதிகளைப் பயன்படுத்தலாம். இவை சீக்கிரமாகவே நிரம்பிவிடும் என்பதால், மாற்று ஏற்பாடுகளாக பின்வருவன அறிவிக்கப்பட்டுள்ளன. 

அல் வாசல் கிளப் (Al Wasl Club Parking) மற்றும் அல் கிஃபாப் (Al Alkifaf Parking) பகுதியில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு, கொண்டாட்ட இடத்திற்குச் செல்ல இலவச ஷட்டில் பேருந்துகள் இயக்கப்படும்.

ஷேக் சயித் சாலை மற்றும் அல் கெய்ல் சாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது ஓரமாக நிறுத்தி வைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள்

துபாய் கிரீக் பகுதியில் உள்ள அனைத்து நடைபாலங்கள் மற்றும் லிஃப்ட் வசதிகள் மாலை 4:00 மணிக்கு மூடப்படும்.

கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, மக்கள் கலைந்து செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் மற்றும் டாக்ஸி சேவை தயார் நிலையில் இருக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருபவர்கள் நோல் கார்டுகளில் (Nol Card) போதிய பேலன்ஸ் இருப்பதை உறுதி செய்யவும் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகக் கொண்டாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

TAGGED: