அமீரகத்தின் கொடி நாள் வருகிற நவ.3ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி காலை 11 மணிக்கு ஒரே நேரத்தில் கொடியேற்றி மரியாதை செலுத்த வேண்டுமென துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமீரக கொடி நாள்:
அமீரகத்தின் கொடி நாள் நவம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது. 2004ஆம் ஆண்டு நவ.3ஆம் தேதி அமீரகத்தின் அதிபராக மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் பதவியேற்ற சிறப்பான நாளை குறிக்கும் வகையில் 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் கொண்டாடப்படுகிறது.
இது நாட்டிற்கான ஒற்றுமை மற்றும் தேசியப் பெருமையின் முக்கியச் சின்னமாக ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுடன் 13வது ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது.
இது ஒரு பொது விடுமுறை இல்லை என்றாலும், அமீரகக் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என அனைவரும் இணைந்து அலுவலகங்கள், பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கொடியை ஏற்றி, தேசத்தின் மீதான அன்பையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.
துபாய் ஆட்சியாளர் அழைப்பு:
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், வரவிருக்கும் அமீரகத்தின் கொடி நாள் 2025 கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசத்திற்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையின் அடையாளமாக, நவம்பர் 3 அன்று அனைத்து அமைச்சகங்களும், நிறுவனங்களும் ஒரே நேரத்தில் கொடியை ஏற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், “சகோதர சகோதரிகளே, நவம்பர் 3 அன்று நாம் கொடி நாளைக் கொண்டாடுகிறோம். நமது கொடி நமது இறையாண்மையின் சின்னம் மற்றும் நமது ஒன்றியத்தின் சின்னம் ஆகும்.
இந்த வருடாந்திர நிகழ்வில் நமது உறுதிமொழியைப் புதுப்பித்து, நமது விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம், மேலும் நமது நாட்டின் கொடியின் மீதான அன்பை வெளிப்படுத்துகிறோம். நாடு முழுவதும் உள்ள அனைத்துக் குடிமக்களும், குடியிருப்பாளர்களும், நிறுவனங்களும் நவம்பர் 3, திங்கட்கிழமை, சரியாக காலை 11 மணிக்கு அமீரக கொடியை ஏற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இது நமது தேசியக் கொடியைச் சுற்றி நாம் கொண்டிருக்கும் ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேசப்பற்று மற்றும் தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றின் விழுமியங்களை உலகிற்கு எடுத்துக்காட்டும். அமீரக கொடி என்றென்றும் பெருமையுடனும் புகழுடனும் விண்ணில் பறக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
