jiohotstar.com  விவகாரம்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காணொளி வெளியிட்ட சிறுவர்கள்:

ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள்  இணைவது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில் jiohotstar.com என்ற இணையதள முகவரி டெல்லியைச் சேர்ந்த டெவலப்பர் ஒருவர் வாங்கி, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளார் என்பது போன்ற செய்திகள் இணையத்தில் வட்ட மடித்து வந்தன. பிறகு மீண்டும் துபாயில் சேவா நிறுவனத்தை நடத்தி வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Jainam மற்றும் Jivika சகோதர சகோதரிகள் டொமைனை டெல்லி டெவலப்பரிடம் ரூபாய் பத்து லட்சம் கொடுத்து  விலைக்கு வாங்கி, அந்த இணைய முகவரிக்கு முதலாளியான செய்தியும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இணைய முகவரியில் காணொளி ஒன்றை வெளியிட்டு நாங்கள் இதனை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இலவசமாக தர முன்வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

டொமனை வாங்கக் காரணம் என்ன?

எங்கள் பயணத்தைப் பகிர்வதன் மூலம், மற்றவர்களை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறோம். டெல்லி டெவலப்பரின் கல்விக்கு உதவவும், எங்களின் சேவாவை பயணத்தை தெரியப்படுத்தவுமே இதனை நாங்கள் வாங்கினோம் என்று கூறியிருந்தனர்.

இலவசமாகக் கொடுக்கிறோம்

இந்த நிலையில்,  தற்போது  காணொளியை வெளியிட்டுப் பேசிய ஜைனம் மற்றும் ஜீவிகா, டொமைனை கேட்டு பலரும் இமெயில் மூலம் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், நாங்கள் ஒரு போதும் டொமைனை விற்பனை செய்ய விரும்பவில்லை எனக் கூறினர். மேலும் நாங்கள் டெவலப்பருக்கு உதவும் விதமாக, எங்களுடைய சேவை பயணத்தைப் பகிர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுடைய நோக்கம். எனவே ரிலையன்ஸ் நிறுவனம் விரும்பினால் டொமைனை இலவசமாகவும், மகிழ்ச்சியுடனும்  முறையான ஒப்பந்தங்களில்  அடிப்படையில் கொடுக்க விரும்புகிறோம் எனத் தெரிவிக்கின்றனர். முக்கியமாக யாருடனான கட்டாயத்தின் அடிப்படையில் இதைக் கொடுக்கவில்லை  எனச் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.