அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரத்தை கோடை காலத்தை முன்னிட்டு குறைத்துள்ளதாக துபாய் அரசு மனிதவளத் துறை (DGHR) அறிவித்துள்ளது. அதன்படி, இந்த நடைமுறை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாள் வேலை நாட்களாக இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை நான்கு நாள் வேலை நாட்களாக இருக்கும். இந்த நடைமுறையை செயல்படுத்த அரசு ஊழியர்களை இரண்டு குழுக்களாக பிரித்துள்ளது துபாய் அரசு மனிதவளத் துறை.
குழு 1: வேலை நாள், நேரம் மற்றும் விடுமுறை விவரம்
திங்கள் முதல் வியாழன் வரை எட்டு மணி நேரம் வேலை நாள் என்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு வழக்கம் போல் விடுமுறையாகும்.
குழு 2: வேலை நாள், நேரம் மற்றும் விடுமுறை விவரம்
திங்கள் முதல் வியாழன் வரை ஏழு மணி நேரம் வேலை நாள் என்றும் வெள்ளிக்கிழமை மட்டும் 4.5 மணி நேரம் வேலை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு வழக்கம் போல் விடுமுறையாகும்.
இதுபோன்ற ஒரு திட்டம் அறிவிக்கப்படுவது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 30 வரை 21 அரசு நிறுவனங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையால் ஊழியர்களின் பணிச்சூழல் மேம்பட்டுள்ளதாகவும், உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நடைமுறையால் 98% ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு மதிய நேர இடைவேளை & டெலிவரி ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை
முன்னதாக, அமீரகத்தில் உள்ள தொழிலாளர்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக மிட்டே பிரேக் எனப்படும் மதிய நேர இடைவேளையை MoHRE அறிவித்திருந்தது. அதன்படி ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை நண்பகல் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை தொழிலாளர்களுக்கு மதிய நேர இடைவேளை அமலில் உள்ளது. விதிமுறை மீறப்படும் பட்சத்தில் ஒவ்வொரு ஊழியருக்கும் AED 5,000 முதல் AED 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் MoHRE தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கோடை காலத்தில் டெலிவரி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை இயங்கும் 10,000 க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை அமீரகம் முழுவதும் அமைத்துள்ளதாக MoHRE தகவல்.
