உலகில் முதன்முறையாக தானாக இயங்கக்கூடிய ரோபோ காரை டென்சார் நிறுவனம் வரும் செப்டம்பர் 24 & 25 ஆகிய தேதிகளில் துபாயில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் சிறப்பம்சங்கள் பற்றி இதில் காண்போம்.
ரோபோ கார் (Robo car)
அமெரிக்காவில் சிலிக்கான் வேலியை சார்ந்த டென்சர் என்ற ஏஐ நிறுவனம் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள உலக சுய ஓட்டுநர் போக்குவரத்து மாநாட்டில் தானாக இயங்க கூடிய ரோபோ காரை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் ஏற்பாடு செய்வதாகவும், இதில் 3000 -க்கும் பங்குபெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டென்சர் நிறுவனம், தனது இணையதளத்தில், இந்த Level 4 ரோபோ கார் ஓட்டுநர் இன்றி தானாக ஓடும் திறன் கொண்டது. அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தானாக ஓடக்கூடிய இந்த கார், அப்பகுதிகளை விட்டு வெளியே சென்றால் ஒட்டுநர் ஓட்டும் முறைக்கும் மாறி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரின் அமைப்பு
எதிர்கால தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட டென்ஸர் ரோபோகார் “உலகிலேயே முதல் வகையக கார்” என விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த கார் 124 இன்ச் வீல்பேஸ் (சக்கரம் இடையிலான தூரம்), 217.5 இன்ச் நீளம், 78.3 இன்ச் உயரம், 79.9 இன்ச் அகலம் என ஒரு பெரிய SUV வாகனத்துக்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இது ஒரு சாதாரண கார் இல்லை என்றும் இது சக்கரங்களுடன் இயங்கும் ரோபோ என்றும் டென்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது மனிதனின் உதவி இருந்தாலும், இல்லையென்றாலும் அதன் வேலைகளும் செய்யும் திறன் படைத்தது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
காரின் அம்சங்கள்
இந்த ரோபோ காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 37 கேமராக்கள், 11 ரேடார்கள், 5 லிடார்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சென்சார்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிடார் மற்றும் கேமராக்களை சுத்தம் செய்யும் அமைப்புகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சென்சார்கள் மணல், தூசி மற்றும் பாலைவன காலநிலைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுதுள்ளது. இதனால் இந்த கார் பாலைவன வெப்பம், தூசி, இரவு, பனிமூட்டம், மழை என எந்த சூழலிலும் ஓடும் திறன் கொண்டது.
ரோபோகாரின் உள்ளமைப்பு (அதாவது உள்ளே இருக்கும் மின்சார மற்றும் எலெக்ட்ரானிக் அமைப்பு) மிக நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் எல்லாம் இரட்டிப்பு (backup) முறையுடன் உள்ளன. அதாவது, ஒரு சிஸ்டம் பழுதாகினாலும், மற்றொன்று வேலை செய்து காரை சீராக செயல்படுத்த முடியும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரேடார் கதிர்களை ஊடுருவச் செய்வது, லிடார் கருவிக்கு பார்வையில் எந்த தடையும் இல்லாமல் அமைப்பது மற்றும் குறைந்த உயரம் கொண்ட ஹூட் (முன் மூடி பகுதி) ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன.
மடங்கக்கூடிய ஸ்டீரிங்
சுயமாக ஓட்டுதல், தானாக பார்க்கிங் செய்யும் என ஏராளமான வசதிகளுடன் மடங்கக்கூடிய ஸ்டீரிங் மற்றும் பெடல்கள் என இன்னும் பல அம்சங்கள் உள்ளன. தானாக ஓட்டும் முறையில் பயணிக்கும் போது ஸ்டீரிங் மற்றும் பெடல்கள் மடங்கிவிடும். இதனால் ஓட்டுநர் இருக்கையில் அமருகையில் செளகரியமாக உட்கார்ந்து கொள்ளலாம். இந்த காரிற்கு பல நிறுவனங்கள் உறுதுணையாக உள்ளன.
8000 TOPS கொண்ட கணினியை வழங்கிய Nvidia நிறுவனம், 17 மெகா பிக்சல் கேமரா வழங்கிய Sony, உற்பத்தியை ஆதரிக்கும் VinFast நிறுவனம், உலகில் முதல்முறையாக ரோபோகாருக்கு காப்பீடு வழங்கும் Marsh நிறுவனம் என பல முன்னனி நிறுவனங்கள் சேர்ந்து ரோபோகாரின் பாதுகாப்பை உறுதிபடுத்துகின்றன. இந்த ரோபோ கார்கள் 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என டென்சார் நிறுவனம் அறிவித்துள்ளது.
