‘உலக விளையாட்டு உச்சி மாநாடு 2025’ (World Sports Summit 2025) டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறும் என துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் அறிவித்துள்ளார்.
மாநாடு பற்றிய தகவல்கள்:
உலகளாவிய விளையாட்டு நட்சத்திரங்கள், நிபுணர்கள் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில் உலக விளையாட்டு உச்சி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாடு வரும் டிசம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறும். மதீனாத் ஜுமேராவில் நடைபெறும் இந்த நிகழ்வை துபாய் விளையாட்டு கவுன்சில் நடத்துகிறது.
மாநாட்டின் நோக்கம்:
இது குறித்து இளவரசர் தனது எக்ஸ் பதிவில், ”துபாயை சர்வதேச விளையாட்டு தளமாக மேம்படுத்தவும், அனைத்து நாடுகளின் விளையாட்டு ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் தளமாகவும், அடுத்த தலைமுறையினரை ஈர்க்கவும் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் விவாதிக்கப்படும் தலைப்புகள்:
“இந்த உச்சி மாநாட்டில், குழு மற்றும் தனிநபர் விளையாட்டுகளின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கப்படும். மேலும் தேசிய அணிகள் மற்றும் விளையாட்டு கிளப்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயப்படும். அனைத்து வயதினருக்கும் மற்றும் பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் திறமைகளைத் தயார்படுத்துவதில் கல்வி நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு அகாடமிகளின் முக்கிய பங்கையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்த உச்சி மாநாட்டில், பார்வையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான வழிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் பொருளாதார சாத்தியக்கூறுகள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்படும். அத்துடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வின் விரைவான விரிவாக்கம் காரணமாக துறையின் எதிர்காலத்தை பாதிக்கும் சமீபத்திய தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
துபாய், தனது மிகுந்த ஆயத்தம், தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஈர்ப்பு திறனின் மூலம், ஆண்டுதோறும் முன்னணி விளையாட்டு நிகழ்வுகளுக்கான உலகத் தளமாக திகழ்கிறது.
இந்த உச்சிமாநாடு, விளையாட்டு உலகின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான முன்னேற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
