துபாயில் பட்டாசு கழிவுகளை அகற்றிய இந்தியர்கள்; பெருகும் பாராட்டுகள்!

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில் துபாயின் அல் மன்ஹூல் பகுதியில் இரண்டு இளைஞர்களும் அவ்வழியாகச் சென்ற ஒரு வழிப்போக்கரும் என மூவரும் இணைந்து பட்டாசு குப்பைகளை அதிகாலை 1 மணியளவில் சுத்தம் செய்தனர். 

துபாயில் தீபாவளி கொண்டாட்டம்: 

அக்.20 2025 அன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அமீரகத்திலும் வெகு விமரிசையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து  கோயிலில் (BAPS Hindu Mandir) தீபாவளி சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். துபாய் க்ரீக் மற்றும் குளோபல் வில்லேஜ் போன்ற இடங்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியிருப்பு பகுதியில் கிடந்த பட்டாசு கழிவுகள்:

இரண்டு நாள் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு அக்.22 அன்று அதிகாலை 1 மணியளவில் துபாயின் அல் மங்கூல் (Al Mankhool) பகுதியில் தெருவில் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில், அங்கிருந்த மூன்று இந்தியர்கள் தாமாக முன்வந்து ஈடுபட்டனர். 

கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்:

துபாயில் வசிக்கும் நிஷ் ஷேவாக் மற்றும் அவரது நண்பர் யுக் இருவரும் தங்கள் பகுதியைக் சுத்தம் செய்ய வந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ஆதில் என்ற நபரும் இவர்களின் முயற்சியைப் பார்த்து இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

அவர்கள் மூவரும் இணைந்து  அல் மங்கூல் மசூதிக்கு அருகில் இருந்த தெருக்களில் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பட்டாசு கழிவுகளை அகற்றினர்.

இது குறித்து நிஷ் கூறுகையில், “நான் அக்டோபர் 21 அன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு வீட்டிற்குத் திரும்பிய போது, தெருக்கள் முழுவதும் குப்பையாக இருந்ததைப் பார்த்தேன்.

இந்தப் பெரிய குப்பைக் கிடங்கை பார்த்ததும் வருத்தம் ஏற்பட்டது. முதல் நாள் சமூக ஊடகங்களில் தான் சுத்தம் செய்யப் போவதாக பதிவிட்டிருந்த நிலையில், துபாய் நகராட்சி அதிகாரிகள் அதிகாலையிலேயே எல்லாக் குப்பைகளை அகற்றியிருந்தனர். 

அதிகாரிகள் இவ்வளவு வேகமாகச் செயல்பட்டது ஆச்சரியமாக இருந்தது. அதே நேரத்தில் நாமும் நம்மால் முடிந்ததை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அடுத்த நாள் அக்.22 அன்று அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

பட்டாசுகள் வெடிப்பது  மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் அதன் குப்பையை யாராவது அகற்றினால் மட்டுமே தெருவில் இருந்து போகும். அதனால் நாங்களே சுத்தம் செய்ய நினைத்தோம். கொண்டாட்டங்களுக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் குப்பையை போடும் முன் இரண்டு முறை யோசிக்க வேண்டும். 

பண்டிகை என்பது மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை பற்றியது, குப்பையை போட்டு விட்டுச் செல்வது அல்ல. நம்மில் ஒவ்வொருவரும் சில நிமிடங்கள் சுத்தம் செய்ய ஒதுக்குவது  பெரிய மாற்றத்தை  ஏற்படுத்தும்” என்று  குறிப்பிட்டார். பட்டாசு கழிவுகளை அகற்றிய மூன்று நபர்களுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.