இனிமேல் விமானங்களில் ஸ்டார்லிங்கின் இலவச வைபை: எமிரேட்ஸ், ஃபிளைதுபாய் அறிவிப்பு!

தங்களது அனைத்து போயிங் 777 ரக விமானங்களிலும், செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் Wifi-ஐ பயணிகளுக்கு இலவசமாக வழங்க எமிரேட்ஸ் மற்றும் ஃபிளைதுபாய் திட்டமிட்டுள்ளது. 

விமானங்களில் இலவச வைபை:

முன்னணி விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் (Emirates) மற்றும் ஃபிளைதுபாய் (flydubai) ஆகியவை, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) அதிவேகச் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தங்கள் விமானங்களில் இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

தங்களது விமானத்தில் பயணிகளுக்கு ஸ்டார்லிங்க் Wifi வசதியை  வழங்குவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் flydubai விமான நிறுவனம்  ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் வெளியானது. 

எமிரேட்ஸ்: 

நவம்பர் 2025 முதல், எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 (Boeing 777) விமானங்களில் ஸ்டார்லிங்க் சேவை முதலில் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏர்பஸ் A380 (Airbus A380) விமானங்களிலும் நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

2027-ஆம் ஆண்டில் எமிரேட்ஸின் அனைத்து விமானங்களிலும் இந்தச் சேவை விரிவுப்படுத்தப்படும். எமிரேட்ஸில் அனைத்து பயண வகுப்புகளிலும், எந்தவிதக் கட்டணமோ அல்லது லாயல்டி நிரல் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமின்றி,  எளிதான அணுகலுடன் ஸ்டார்லிங்க் வைஃபை பெறலாம். 

ஃபிளைதுபாய்: 

ஃபிளைதுபாய் நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் இருந்து தங்கள் முழு போயிங் 737 (Boeing 737) விமானங்களிலும் ஸ்டார்லிங்க்கை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குத் தடையற்ற இணைய இணைப்பு கிடைக்கும்.

ஃபிளைதுபாய் விமான நிறுவனமும் தங்கள் பயணிகளுக்கு இந்த உயர்-அலைவரிசை இணையத்தை எந்தவிதக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்குவதாக அறிவித்துள்ளது.