இந்தியாவில் துவங்கியது ஹஜ் 2025 விண்ணப்பங்கள்; செப்டம்பர் 9 இறுதி நாள்:

2025 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கான விண்ணப்பங்கள் (Haj-2025 application) வருகின்ற ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 9 வரை வரவேற்கப்படுவதாக இந்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ (Kiren Rijiju) தெரிவித்துள்ளார்.

இம்முறை 1,75,025 இந்திய யாத்ரீகர்களுக்கு சவூதி அரசு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை இந்தியாவின் ஹஜ் கமிட்டி இணையத்திலும் மேலும், முதல் முறையாக, இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட Haj Suvidha செயலியிலும் பதிவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

வருடா வருடம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு, அரசு செயல்முறையை மிகவும் எளிமைப்படுத்தி வருவதாகவும், மெஹ்ராம் துணை இன்றி புனிதப் பயணம் அதவாது 45 வயதிற்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஆண் துணை இன்றி புனித பயணம், சென்ற ஆண்டில் மட்டும், சுமார் 4,558 மகளிர் பயன்பெற்றனர் எனவும் இவ்வாண்டு அந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த அரசு சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

300 யாத்ரீகர்களுக்கு ஒரு காதிம் (மாநில ஹஜ் இன்ஸ்பெக்டர்) என்று இருந்தது, இப்போது 150 யாத்ரீகர்களுக்கு ஒரு காதிம் என்று அளவு குறைக்கப்பட்டு, சேவையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்திய அரசு வெளியிட்ட ஹஜ் கொள்கை 2025-ன் படி சவூதி அரசு ஒதுக்குவதில் 70% இந்திய ஹஜ் கமிட்டிக்கும் (HcoI) 30% தனியார் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.