2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கொள்கையின் கீழ் இந்திய ஹஜ் கமிட்டி (HCOI) அடுத்த ஆண்டு புனித பயணத்துக்கான ‘மெஹ்ராம் கோட்டா’ என்று அழைக்கப்படும், பிரிவின் கீழ் 500 இடங்களை மகளிருக்கென ஒதுக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஒதுக்கீடு பாஸ்போர்ட் இல்லாதது போன்ற காரனங்களால் முன்பு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியாத, ஆனால் அவர்களின் ஆண் துணை (மஹ்ராம்) தேர்வான பெண்களுக்கு உதவுவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இதற்கான விண்ணப்பங்கள் துவங்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டின் நோக்கம்:
பெண்கள் தங்களின் மஹ்ராம் உடன் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள உதவுவதற்கு, எதிர்காலத்தில் மஹ்ராம் இல்லாமல் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன?
- பெண் ஹஜ் பயணத்தை முன்பு எப்போதும் செய்திருக்கக்கூடாது.
- 2025 ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பத்தின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
- தங்களது மெஹ்ரான் உறவு முறையை நிரூபிக்கும் ஆவணங்கள்.
விண்ணப்பச் செயல்முறை:
2024 டிசம்பர் 9 இரவு 11:59 மணிக்குள் விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https:// hajcommittee.gov.in மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- செல்லத்தக்க பாஸ்போர்ட் (2026 ஜனவரி 15 வரை) விண்ணப்பதாரர் பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கங்களை சமர்பிக்க வேண்டும்
- சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
- முகவரி சான்று,
- மஹ்ராம் உறவின் ஆதாரம்.
தேவையான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரம்புகள்:
இந்த புனித பயணத்திற்காக பிரிக்கப்படும் ஒவ்வொரு குழுவிலும் (கவர்) அதிகபட்சம் 5 பயணிகள் மட்டுமே இருக்க முடியும் (ஏற்கனவே ஐந்து பயணிகள் உள்ள கவருக்கு பெண் பயணி விண்ணப்பிக்க முடியாது) எனவும் ஆவணங்கள் குறைந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டு எண்ணிக்கையை மீறினால், டிஜிட்டல் ரேண்டம் செலேக்க்ஷன் மூலம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
சரிபார்ப்பு:
சரிபார்ப்பு நடைமுறை மாநில/தொகுதி ஹஜ் குழுக்கள் 2024 டிசம்பர் 11-க்குள் விண்ணப்பங்களை சரிபார்த்து பரிந்துரைக்கும், இந்த முயற்சியின் மூலம், பெண்கள் தங்களின் மஹ்ராம் உடன் ஹஜ் பயணத்தை எளிதாக மேற்கொள்ள முடியும்.
