இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையின் அரஃபாத் நாள் (ஜூன் 5) அன்று கடும் வெப்பமான வானிலை நிகழக்கூடும் என்பதால், யாத்திரிகர்களின் நலனை கருத்தில் கொண்டு சவூதி அரேபியாவில் முதல்முறையாக திறந்து மூடக்கூடிய நிழற் குடைகள் நிறுவப்பட்டுள்ளன.
குளிர் காற்று வீசும் நிழற்குடைகள்:
மெக்கா நகரத்திற்கு அருகில் உள்ள அரஃபாத் மலைப்பகுதியில், இந்த நவீன குடைகள், வெப்பத்திலிருந்து யாத்திரிகர்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடையும் முன் 20 மீட்டர் நீளமும், பின் 11 மீட்டர் நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது.
சவூதி தொலைக்காட்சி அல்இக்பாரியா தெரிவித்ததுப்படி, இந்த குடையின் திறக்கும் மற்றும் மூடப்படும் நேரம் 150 விநாடிகள் ஆகும். இந்த குடைகள் தானியங்கிய மோட்டார்களுடன், 14 மீட்டர் உயரமுள்ள தூண்களால் இணைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தை குறைப்பதற்காக குளிர்காற்று விசிறிகளும் (mist fans) இதில் பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமராக்களுடன் நிழற்குடைகள்:
இவை புனித நகரான மெக்காவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரந்த சமவெளி பகுதியில் உள்ளன. குடைகளின் கீழ் மக்களின் கூட்ட நெரிசலை கண்காணிக்கவும், அவற்றைச் சரியான முறையில் கையாளவும் பாதுகாப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.
1.1 மில்லியனுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உலகம் முழுவதிலிருந்தும் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற சவூதி அரேபியாவிற்கு வந்துவிட்டனர். இம்முறை ஹஜ் கடும் வெப்பத்தில் நடைபெறவிருக்கிறது என்பதால், பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொழுகை நேரம் சுருக்கம்:
சவூதி அரேபியாவின் மத அதிகாரி ஷேக் அப்துல்ரஹ்மான் அல் சுதைஸ், மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரு புனிதப் பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ பிரார்த்தனை மற்றும் தொழுகை நேரத்தை சுருக்குவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புனித மசூதிகளின் மத விவகாரங்களுக்கான தலைமைத் தலைவர் ஷேக் அப்துல்ரஹ்மான் அல் சுதைஸ், அனைத்து பிரார்த்தனைகளும் 5-10 நிமிடங்கள் இருக்கும் என்றும், வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் 15 நிமிடங்களுக்கு மேல் இருக்காது என்றும் கூறினார்.
மெக்கா பெரிய பள்ளிவாசல் மற்றும் மதீனாவின் நபி மஸ்ஜிதில் அதிகமான யாத்திரிக்கள் திரள்வதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இரு புனிதப் பள்ளிவாசல்களின் மத விவகாரத் துறையின் தலைவர் ஷெய்க் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த 16 ஆண்டுகள் ஹஜ் கடும் வெப்பத்தில் நடைபெறாது. இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் அடிப்படையில், 2026 முதல் ஹஜ் நிகழ்வுகள் படிப்படியாக குளிர்ந்த பருவங்களுக்கு நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
