NRI-களுக்கு இனி நிம்மதி! தங்கம் கொண்டு வருவதில் புதிய விதிகள் அமல்!

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த நீண்ட கால சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பழைய சுங்க விதிகளில் இந்திய அரசு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. 

2026-ஆம் ஆண்டு இந்திய பட்ஜெட்டில் தங்கம் தொடர்பான சுங்க விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்திய பட்ஜெட் 2026-இல் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள தங்கத்திற்கான புதிய சுங்க விதிகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு  பெரும் நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் இந்த மாற்றத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

புதிய விதிமுறைகள் என்ன?

இதுவரை தங்கம் கொண்டு வரும்போது அதன் எடையோடு சேர்த்து, சந்தை விலையையும் கணக்கில் கொண்டு வரி வசூலிக்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குறைந்த அளவு தங்கம் வைத்திருந்தாலும் பயணிகள் அதிக வரி கட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போது ‘மதிப்பு’ என்ற நிபந்தனை நீக்கப்பட்டு, எடை மட்டுமே அளவுகோலாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி பெண்கள் 40 கிராம் வரை தங்க ஆபரணங்களை வரி இல்லாமல் கொண்டு செல்லலாம். ஆண்கள் 20 கிராம் வரை தங்க ஆபரணங்களை வரி இல்லாமல் கொண்டு செல்லலாம்.

முந்தைய சிக்கல்: 

இதற்கு முன்பு பெண்களுக்கு ₹1,00,000 மற்றும் ஆண்களுக்கு ₹50,000 என்ற பண மதிப்பு வரம்பு இருந்தது. தங்கம் விலை கடுமையாக உயர்ந்ததால், அனுமதிக்கப்பட்ட எடையை விட குறைவான தங்கம் வைத்திருந்தாலும் அதன் மதிப்பு வரம்பைத் தாண்டிவிடும் சூழல் இருந்தது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் தேவையற்ற சோதனைகளுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர்.

சமூக அமைப்புகளின் வெற்றி

கடந்த செப்டம்பர் 2025-இல், ஷார்ஜா இந்திய சங்கம் இது தொடர்பாக இந்திய நிதியமைச்சகத்திடம் முறையிட்டிருந்தது. பழைய விதிகள் சாதாரண தொழிலாளர்களைக் கூட அறியாமல் ‘விதி மீறுபவர்களாக’ மாற்றுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஷார்ஜா இந்திய சங்கத்தின் தலைவர் நிசார் தலங்காரா மற்றும் துணைத் தலைவர் டி.கே. பிரதீப் ஆகியோர், இந்த மாற்றம் விமான நிலையங்களில் நிலவும் குழப்பங்களையும், அதிகாரிகளின் அத்துமீறல்களையும் தவிர்க்க உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றத்தின் மூலம், தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட எடைக்குள் தங்கம் கொண்டு வரும் பயணிகள் இனி கவலைப்படத் தேவையில்லை. இது வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. 

தங்க நகைகளைக் கொண்டு செல்வதில் சிக்கல் இருப்பதாகவும், பழைய சுங்க விதிகளை மாற்றவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சமீபத்தில் இந்திய நிதி அமைச்சர் சுங்கத் துறையில் சீரமைப்பு கொண்டு வரப்படும் என உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: