துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கைக்குலுக்க மறுத்ததாக பாகிஸ்தான் அணி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா VS பாகிஸ்தான்
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து, போட்டியின் முடிவில் இந்திய அணி கைகுலுக்க மறுத்ததாக பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவீத் அக்ரம் சீமா, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டிடம் புகார் அளித்தார்.
பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவீத் அக்ரம் சீமா, இந்திய அணியின் நடத்தை விளையாட்டு வீரர்களின் உணர்வுக்கு எதிரானது மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் மாண்புக்கு முரணானது என கூறியிருந்தார்.
மேலும், இந்திய அணியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா போட்டிக்கு பிந்தைய தொலைக்காட்சி பேட்டியை புறக்கணித்தார் என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மைக் ஹெசன் பேசுகையில், ”போட்டி தொடங்கும்போது கேப்டன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் சல்மான் ஆகா ஒருவருடன் ஒருவர் கைகுலுக்கவில்லை. UAE அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய கேப்டன் UAE கேப்டன் முகமது வாசீமுடனும் கைகுலுக்கவில்லை என்பதால் இது ஆரம்பத்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின் களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் நேரடியாக டிரெஸ்ஸிங் ரூமுக்கு திரும்பினர். ஆரம்பத்தில் சல்மான் ஆகா மற்றும் அவரது அணியும் கைகுலுக்க விரும்பவில்லை போலத் தோன்றியது. ஆனால் தனது அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களுடன் கைகுலுக்க விரும்பியதாகவும், ஆனால் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்காமல் சென்றுவிட்டதாக மைக் ஹெசன் தெரிவித்தார்.
வெற்றியை அர்ப்பணித்த இந்திய கேப்டன்
போட்டிக்குப் பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதித்த குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். நம்மை ஊக்குவித்த இந்திய ராணுவத்திற்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். அவர்களை எப்போதும் நாம் ஊக்குவிக்க வேண்டும். அவர்களை மகிழ்விக்கும் வகையில் நாங்கள் தொடர்ந்து விளையாடுவோம்” என்றார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் செப்.9ஆம் தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
