UAE – USA  கூட்டணியில் AI சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க இந்தியா திட்டம்!

அமீரகம் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து AI சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியா உருவாக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு டெல்லியில் நடைபெற்ற AI மாநாட்டில் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்து, தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து AI உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், OpenAI, மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

இதில் கலந்து கொள்வதற்காக அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் மாண்புமிகு ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் சென்றிருந்தார். அங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய அபுதாபி இளவரசர் AI தொழில்நுட்ப திட்டங்கள் குறித்து விவாதித்தார். அதன் ஒரு பகுதியாக அமீரகம் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து AI சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியா உருவாக்க உள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

AI சூப்பர் கம்ப்யூட்டர் 

அமீரகம் மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா 8 எக்ஸாஃப்ளாப் (Exaflops) திறன் கொண்ட AI சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க உள்ளது. ஒரு எக்ஸாஃப்ளாப் ஒரு வினாடிக்கு ஒரு குவின்டில்லியன் கணக்கீடுகளை செய்யும் திறன் கொண்டது. அதாவது, 1-க்கு அப்புறம் 18 சுழியன்கள் இட வேண்டும். 10,00,00,00,00,00,00,00,000. அந்த வகையில் 8 எக்ஸாஃப்ளாப் என்பது ஒரு வினாடிக்கு 80,00,00,00,00,00,00,00,000 (8 எக்ஸாஃப்ளாப்) கணக்கீடுகளை செய்யும் அதீத திறன் கொண்டது. 

அபுதாபியை தளமாகக் கொண்ட தொழில்நுட்பக் குழுவான G42, முகமது பின் சயீத் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் (MBZUAI), அமெரிக்க சிப் தயாரிப்பாளர் செரிப்ராஸ் மற்றும் இந்தியாவின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் AI சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக உள்ளது. 

இந்த AI சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியாவில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசுத் துறைகளில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.