ஏங்ங்ங்ங்கக இதுதாங்க துபாய்…நள்ளிரவிலும்  பெண்கள் தைரியமாக நடமாடலாம்!  வீடியோ வெளியிட்ட இந்திய பெண்!

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நள்ளிரவு  2.30 மணியளவிலும் துபாய் நகரின் சாலைகளில் எவ்வித பயமும் இன்றி நிம்மதியாக, பாதுகாப்பாக உணர முடிவதாக வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவைச் சேர்ந்த திரிஷா ராஜ் என்ற பெண், துபாய் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்பதை உணர்த்தும் வகையில், நள்ளிரவு 2.30 மணிக்கு துபாயின் தெருக்களில் தனியாக நடந்து செல்கிறார். அதை வீடியோவாகவும் பதிவு செய்த அவர் முழுமையாக பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வைரலாகும் வீடியோ!

குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து பார்ப்போருக்கு, எப்படி இவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் சொந்த நாடான இந்தியாவில், இவ்வாறான நேரத்தில் தனியாக வெளியே செல்வது ஆபத்தாகக் கருதப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆண்கள் துணையோடுதான் பெண்கள் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால், துபாயில் அப்படி இல்லாமல் இருப்பது வரவேற்கத்தக்கது என அந்த வீடியோவுக்கு கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

துபாய் தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம்!

துபாயில் வாழும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்து தாங்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர்  உலகின் பல நகரங்களுடன் ஒப்பிடும்போது, துபாய் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். 

எப்படி துபாய் இவ்வளவு பாதுகாப்பான நகரமாக இருக்கிறது?

விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள்: மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் முழுமையும் சர்வேலென்ஸ் கேமிராக்கள் இருக்கும். அவை எப்போதும் காவல் துறையின் கண்காணிப்பிலேயே இருக்கும். தெருக்களில் லைட்டிங் தொடர்ந்து பராமரிக்கப்படுவதால், இருட்டைக் காரணமாக வைத்து நடைபெறும் குற்றங்களைத் தவிர்க்க முடிகிறது. 

பண்பாடு: ஐக்கிய அரபு அமீரகத்தில் பண்பாடு மற்றும் மரியாதையின் மீது வலுவான கவனம் செலுத்தப்படுவதன் மூலம், குற்றங்களைத் தவிர்க்கும் சூழலை உருவாக்குகிறது.

குற்றம் குறைவாக நடக்கும் நகரம்: குற்ற செயல்கள் கடந்த பல ஆண்டுகளாக குறைந்துள்ளதால், துபாய் தொடர்ந்து  உலகின் மிக பாதுகாப்பான நகரங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. 

வலுவான கொள்கைகள்: அமீரகத்தின் சட்டமைப்பு மற்றும் அதன் சீரான நடைமுறைகள் குற்றங்களுக்கெதிரான மிக வலுவான தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

உலகளவில் பேசப்படும் துபாய்! 

இந்த வீடியோ, உலகளவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ள நாடுகளில், அதை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன என விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல துபாய் அரசின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உலகளவில் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

ஆன்லைன் தரவுத்தளமான Numbeo வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் துபாய் நான்காவது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.