அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் குறைந்த விலையில் விமான பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக IndiGo நிறுவனம், அபுதாபியிலிருந்து கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மங்களூர் என மூன்று தென்னிந்திய நகரங்கங்களை இணைக்கும் வண்ணம் புதிய நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் IndiGo நிறுவனம் அபுதாபியிலிருந்து பெங்களுருக்கு, வாரம் ஆறு முறை இயங்கும் விமான சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மேலும் மூன்று தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவை கொண்டு வந்திருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
அபுதாபி – திருச்சிராப்பள்ளி : வாரத்திற்கு நான்கு முறை (திங்கள், புதன், வெள்ளி,ஞாயிறு)
அபுதாபி – கோயம்புத்தூர் : வாரத்திற்கு மூன்று முறை (செவ்வாய், வியாழன், சனி)
அபுதாபி – மங்களூர்: தினசரி விமானம்
இது குறித்து, IndiGo-வின் உலகளாவிய விற்பனைத் தலைவர் திரு. வினய் மல்ஹோத்ரா கூறுகையில், தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவை வழங்குவதில், நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் வாரத்திற்கு 89 IndiGo விமானங்கள் அமீரக தலைநகரையும் இந்தியாவையும் இணைக்கின்றன என்றும், பயணிகளுக்கு மிக குறைவான விலையில் விமான சேவையை வழங்கி அனைவரும் விரும்பத்தக்க ஓர் விமான நிறுவனமாக IndiGo விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபுதாபியிலிருந்து மங்களூர் மற்றும் கோயம்புத்தூருக்கு ஒரு வழி குறைந்தபட்ச விமான கட்டணம் முறையே AED 353 மற்றும் 330-ஆக இருக்கும் என விமான நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
